×

இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பாரம்பரிய நெல்ரகங்கள், சிறுதானியங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல்

 மதிப்பு கூட்டி பொருட்களாக விற்பனை
 ஆய்வுக்கு பின் கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, ஜன.4: இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பாரம்பரிய நெல்ரகங்கள், சிறுதானியங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்டு மதிப்பு கூட்டி பொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது என்று ஆய்வுக்கு பின் புதுக்கோட்டை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வடமலாப்பூரில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில், புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்அருணா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் அருணா கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் எண்ணற்ற வேளாண் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வடமலாப்பூரில், 2014ம் ஆண்டு துவங்கப்பட்டு, 1,364 குறு, சிறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, பாரம்பரிய நெல்களான கவுனி, தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, சிறுதானியங்கள் போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அரிசி, மாவு வகைகள், திண்பண்டங்கள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின், சிறுதானிய மற்றும் பாரம்பரிய நெல் சுத்திகரிப்பு நிலையம், நெல் அவியல் யூனிட், விதை சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் ஆட்டும் இயந்திரங்கள், சேமிப்பு கிடங்கு ஆகியவைகளும் பார்வையிடப்பட்டது. மேலும், நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளான, சிவப்பு அரிசியில் கலந்துள்ள வெள்ளை, கருப்பு அரிசிகளையும், கருப்பு அரிசியில் கலந்துள்ள வெள்ளை அரிசிகளையும், வெள்ளை அரிசியில் கலந்துள்ள பழுப்பு அரிசிகளையும் பிரித்து எடுத்து, தரமான, சுத்தமான அரிசியை பெறும் வகையில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், எண்ணெய் ஆட்டும் இயந்திரங்களை பார்வையிட்டு, அதிக எண்ணெய் தரக்கூடிய நிலக்கடலை ரகங்களை பயன்படுத்தவும், நெல் சேமிப்பு கிடங்ைக சுத்தமாக பராமரிக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பார்வையிட்டு, அதனுடைய மூலப்பொருட்கள் குறித்து கேட்டறியப்பட்டது என்றார்.இதில், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)ஜெகதீஸ்வரி, நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அகிலா, வேளாண்மை அலுவலர்கள் சுபாஷினி, நிறுவனத்தின் இயக்குநர் விஜயா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பாரம்பரிய நெல்ரகங்கள், சிறுதானியங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Organic Farmers Producers Association ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாணவி மரணம்: ஸ்வாப்...