மார்த்தாண்டம், ஜன.4: மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு நுள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் வின்ஸ் விஜயன் (25). கொத்தனார். அவரது மனைவி சரண்யா (24). ஈழக்குடிவிளை பகுதியில் வின்ஸ் விஜயன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் பிரச்னையும் ஏற்பட்டது. வின்ஸ் விஜயனுக்கு குடிப்பழக்கம் உண்டு. எனவே அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் வின்ஸ் விஜயன் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
ஆனால் மறுநாள் மாலை நேரமான பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரண்யா, புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கிட்டு வின்ஸ் விஜயன் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வின்ஸ் விஜயனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்து பார்த்தபோது வின்ஸ் விஜயன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடன் தொல்லையால் புதிதாக கட்டி வரும் வீட்டில் கொத்தனார் தற்கொலை appeared first on Dinakaran.