×

தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது


சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் நடக்கிறது. அதை முன்னிட்டு இன்று மாலை இடலாக்குடி பட்டாரியார் சமுதாயத்தினர் நெய்து கொண்டு வரும் கொடியை மேள தாளங்கள் முழங்க ரத வீதியை சுற்றி கோயில் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நாளை காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜையும், 7.45 மணிக்கு மேல் கொடியேற்றமும் நடக்கிறது. 2ம் நாள் திருவிழாவான 5ம் தேதி காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதலும், 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் ஸ்ரீ கௌரி திருவீதி உலா வருதலும், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வருதலும் நடக்கிறது.

3வது நாள் திருவிழாவான 6 ம் தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வருதலும், 8.30 மணிக்கு திரு வெம்பாவை இசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கற்பக விருட்சக வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வருதலும், 10.30 மணிக்கு கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்ரமணிய சுவாமி குமாரகோவில் சுப்பிரமணியசாமி வேளிமலை சுப்ரமணியசாமி ஆகியோர் தனது தாய் தந்தையரின் விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சுவாமியை மூன்று முறை வலம் வந்து கோயிலுக்குள் செல்லும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 5வது நாள் திருவிழாவான 7ம்தேதி காலை 8 மணிக்கு பூ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதலும், இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வருதலும் நடக்கிறது.

5ம் நாள் திருவிழாவான 8ம் தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் நடக்கிறது. 6 மணிக்கு தாணுமாலய சுவாமி கோயில் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட சுவாமி அம்பாள் ஆகியோரை கருடன் மூன்று முறை வலம் வரும் கருட தரிசன நிகழ்ச்சியும நடக்கிறது. இரவு 10.30 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடக்கிறது. 6வது திருவிழாவான 9ம் தேதி காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதலும், இரவு 10.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 7ம் திருவிழாவான 10ம் தேதி காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி அம்பாள் பெருமாள் திருவீதிஉலா வருதலும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

8ம் திருவிழாவான 11ம் தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வர் திருவீதி வருதலும் நடக்கிறது. 9ம் திருவிழாவான 12ம் தேதி காலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக திரு வீதிஉலா வருதலும், 7.45 மணிக்கு மேல் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. முதல் தேரில் விநாயகரும், 2வது தேரில் அம்பாளும், 3வது தேரில் சுவாமியும் வலம் வரும் தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி தந்த பல்லக்கில் திருவீதி உலா வருதலும், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதலும், 12 மணிக்கு தனது தாய் தந்தையரின் விழாவில் பங்கெடுத்துக் கொள்ள வந்த விநாயகர் சுப்ரமணிய சுவாமி தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தா வர்ணக்காட்சியும் நடக்கிறது.

10ம் திருவிழாவான 13ம் தேதி காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜர் திரு விதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு திரு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி, துளசிதரன் நாயர், கோயில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உள்பட பக்தர்கள் செய்து வருகின்றனர்.

The post தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : THANUMALAYA SWAMI TEMPLE MARGAZHI GRAND FESTIVAL ,Susindram ,Swami Temple Marghuya Marghujhi ,Ceremala ,Idalakudi Battariyar ,Ratha Road ,Tanumalaya Swami Temple Marghazi Festival: ,
× RELATED சம்பக்குளத்தை பாதுகாக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்: 59 பேர் கைது