×

2 முறை தேசியகீதம் அவமதிப்பு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: சட்டப்பேரவையில் இரண்டு முறை தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் அரசின் சாதனைகளை ஆளுநர் உரை மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்க கூடாது என்ற எண்ணத்திற்காக அதனை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையை விட்டு வெளியேறினார். கடந்த முறையும் உரையை ஆளுநர் புறக்கணித்துள்ளார். இதற்கு ஆளுநர் தரப்பில் தேசிய கீதம் பாடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. தேசியகீதத்திற்கு எந்தவிதமான அவமரியாதையும் தமிழகம் மக்களும் சரி, சட்டப்பேரவையும் சரி இதுவரை செய்ததில்லை.

எனவே, பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும். சீனப்போர் தொடங்கி கார்கில் போர் வரை திமுக அதற்கு தனிப்பட்ட முறையில் நிதிவழங்கி இருந்தாலும், அரசின் சார்பில் வழங்கி இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய பங்கை ஆற்றிவந்துள்ளது. ஆளுநர் உரை முடிவில் கூட வாழ்க பாரத நாடு என்று தான் முடித்துள்ளோம். தேச ஒற்றுமை, தேசபக்தி குறித்து ஆளுநர் பாடம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே இரண்டு முறை பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். பதவிக்காலம் முடிந்து பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆளுநர் ரவி அதனை அவமானமாக கருதி உடனடியாக ராஜினாமா செய்வது தான் அவர் படித்த படிப்பிற்கும், பதவிக்கும் அழகு. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 2 முறை தேசியகீதம் அவமதிப்பு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Minister ,Sivashankar ,Chennai ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Assembly ,Governor ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியிலிருந்து விலக...