- கவர்னர்
- RN
- மக்களவை
- திருமாவளவன்
- சென்னை
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை செயலகம்
- தமிழ்நாடு அரசு
- பொதுச்செயலர்
- ரவிக்குமார்
- ரவி
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருதை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை ஆளுநரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் சொல்லும் காரணம் வியப்பாக உள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சி நிறைவு பெறும்போது தேசிய கீதம் இசைப்பதுதான் தமிழ்நாட்டின் மரபு. இதைத்தான் கடைபிடித்து வருகிறோம். ஆளுநரின் போக்கு சட்டமன்ற மரபை அவமதிக்கும் செயல். விசிக சார்பில் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு அரசியல் செய்து ஆதாயம் தேடுவது ஏற்புடையதல்ல. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக இருக்கிறது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை தங்களின் ஆதாய நோக்கில் கையாளுவது வருத்தம் அளிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுகுறித்து கேள்வி கேட்க வேண்டும் என்றால் சிறப்பு புலனாய்வுத் துறையிடம் கேள்வி கேட்கலாம். தமிழ்நாடு அரசின் மீதும் தமிழ்நாடு காவல்துறையின் மீதும் திரும்பத் திரும்ப கேள்வி கேட்பது அந்த பெண்ணுக்கு நியாயம் வாங்கி தருவதை விட அரசியல் ஆதாயம் தேடுவதாகத்தான் பார்க்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சியுடன் இருப்பதினால் எதிர்க்கட்சியைப் போன்று செயல்படாமல் தோழமை கட்சியாக தான் இருக்க வேண்டும். அதேபோல மக்கள் பிரச்னையையும் மற்றும் நீதியை கூறுகின்ற கட்சியாகவும் இருக்கிறோம்.
ஆளும் கட்சிக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பிரச்னையை சுட்டிக்காட்டி உள்ளோம். கண்டிக்க வேண்டிய பிரச்னையை பொது வெளியில் கண்டித்து இருக்கிறோம். தோழமை கட்சிகளாக இருக்கிற எங்களுக்கு எங்களுடைய சுதந்திரம் எப்போதும் இருக்கிறது. எங்கள் சுதந்திரத்தை கூட்டணி என்ற பெயரில் ஆளுங்கட்சி தடுப்பதில்லை. ஆளுநர் தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த ஆளுநர் பரபரப்பு அரசியல் செய்யக் கூடியவராக இருக்கிறார். அந்தப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுமையாக அவர் இல்லை. அவர் சராசரி அரசியல்வாதியை போல செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்கள் தான் பாஜ கட்சிக்கு தேவைப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு பேரவை மரபை அவமதிக்கும் செயல்: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.