×

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில இளம்பெண் பயணியை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு விமானத்தில் மிகப்பெரிய அளவில், போதைப்பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், தனிப்படை அமைத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது இளம்பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பி வந்தார்.

அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சுங்க அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது தனது உடைமையில் காலிபிளவர் மற்றும் மஸ்ரூ.்கள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார். அதோடு அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். எனவே, அவருடைய உடைமைகளை சுங்கத்துறை மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அந்த மோப்ப நாய், உடைமையை மோப்பம் பிடித்து விட்டு, உடனடியாக தரையில் அமர்ந்தபடி, தனது கால் நகங்களால் தரையை கீறி சைகை செய்தது. அவ்வாறு சைகை காட்டினால் அந்த உடைமையில் சந்தேக பொருள் இருக்கிறது என்று அர்த்தம்.

இதை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் அவரின் உடைமையை திறந்து சோதனை செய்தனர். அதனுள் 14 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்த போது, காலிபிளவர் மற்றும் மஸ்ரூ.்களுக்கு இடையே, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த 14 பார்சல்களிலும் சுமார் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி. இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை கைது செய்தனர்.

அவர் கடத்திக் கொண்டு வந்த உயர்ரக கஞ்சா போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரித்த போது, சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த பெண் என்று தெரிய வந்தது. எனவே இந்த கஞ்சா போதைப் பொருளை, சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த பெண் பயணியை, சுங்கத்துறை மோப்ப நாய் கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thailand ,Chennai ,Chennai Airport Customs ,
× RELATED தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு..!!