பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன், ராமச்சந்திராபுரம் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 75 பெண்கள் உள்பட 100 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன், ராமச்சந்திராபுரம் ஊராட்சி இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பேரூராட்சியுடனான இந்த இணைப்பை கண்டித்து ராமச்சந்திராபுரம் ஊராட்சி கிராம பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு, திடீரென்று பள்ளிப்பட்டு – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன், வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 75 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post தடையை மீறி மறியல் 100 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.