×

சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளர்ச்சித்துறையினர் கைது

திருவள்ளூர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்ட கால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மெல்கி ராஜாசிங் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மணிசேகர், மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர்கள் சங்கத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்பட அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பது உட்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பிறகு அவர்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டிஎஸ்பி யோகேஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

The post சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளர்ச்சித்துறையினர் கைது appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Tiruvallur ,District Government Medical College ,Tamil Nadu Rural Development Department Officers Association ,Melki Rajasingh ,District Secretary… ,Dinakaran ,
× RELATED ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டம்