×

₹23.75 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு

சேலம், ஜன.3:சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், எலும்பியல், மயக்க மருந்தியல், மனநல மருத்துவம், சிறுநீரகவியல், இருதயவியல் என பல்வேறு துறைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்தாண்டு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு, மருத்துவமனை வளாகத்தில் ₹23.75 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்காக பணியினை தொடங்கி வைத்தார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் தேவிமீனாள் கூறியதாவது: சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் விபத்து, நரம்பியல், டயாலிசிஸ், இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தனியாக தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ₹23.75 கோடி மதிப்பீட்டில் விபத்து, நரம்பியல், டயாலிசிஸ், இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறு உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் 5 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதில் 2 அறுவை சிகிச்சை அரங்கம், டயாலிசிஸ் பிரிவு, லாண்டரி உள்ளிட்டவைகள் தனியாக அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டிட பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு பொதுமக்களின் செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் விபத்து காயம், இருதய பாதிப்பு உள்ளிட்ட அவரச சிகிச்சை பாதிப்புகளுக்கு விரைவாகவும், தரமாக சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ₹23.75 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு appeared first on Dinakaran.

Tags : Intensive Care Unit ,Salem ,Salem Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?