?ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?
– ரவீந்திரன், சேலம்.
வீடு கட்டலாம், கிரகப்பிரவேசம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம், அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல், வாங்குதல், பத்திரம் பதிவு செய்யலாம், ஹோமங்கள் செய்யலாம், புதிய பதவியோ, புதிய வேலையோ
ஏற்கலாம்.
?ஆலய கோபுரங்களை வணங்க வேண்டுமா?
– அசோக்குமார், லாலாப்பேட்டை.
நிச்சயமாக. அதற்குத்தான் வானுயர கோபுரத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள். கோபுர நாயனார் என்பார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். ஆலயத்தின் முகப்பு. சாலையில் போகிறோம். அங்கு ஒரு கோயில். அந்தக் கோயில் இருப்பதை கோபுரம்தான் தெரிவிக்கும். கோபுரம் உயரமாக இருக்கும். எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். ஒரு காலத்தில் கோபுரத்தின் உயரத்தைவிட, வீட்டின் உயரம் அதிகமாகக் கட்டக்கூடாது என்பார்கள். காரணம், அவனே உயர்வானவன். நாம், நம் செல்வம், இருப்பிடம், எல்லாம் தாழ்ந்ததுதான். அதனால்தான் அன்றைய ராஜாக்கள் ஆலயங்களை உயரமாகக் கட்டினார்கள்.
? ஒரு குடும்பத்தில் மூத்த பையனுக்கும் வேறு குடும்பத்தில் மூத்த பெண்ணுக்கும் கல்யாணம் செய்யக் கூடாது என்கிறார்களே?
– சி.வைகை செல்வன், துறையூர்.
கால தேசத்தை அனுமானித்துத்தான் இந்த விஷயங்களை எல்லாம் நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணமாக இப்பொழுது ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான் இருக்கிறது. பத்து ஆண்டுகள் கழித்து பெரும்பாலானவர்களுக்கு ஒரு குழந்தைதான் இருக்கும். தலைச்சன் குழந்தை, கடைக் குட்டி என்றெல்லாம் இருக்காது. அப்படியானால் மூத்த பெண், மூத்த பையன் இப்படித்தான் கல்யாணம் செய்து ஆக வேண்டும். ஆகையினால் சாஸ்திரங்களை கால தேச வர்தமானத்துக்கு உட்பட்டே பரிசீலிக்க முடியும். இந்த அடிப்படையில் மூத்த பையனுக்கும் மூத்த பெண்ணுக்கும்தான் திருமணம் செய்ய முடியும். அதனால் தவறில்லை.
?நேர்மறைச் சிந்தனை என்றால் என்ன?
– வெங்கம்மாள்,பிச்சாண்டார்கோவில்.
அழகான ரோஜாப்பூ இருக்கிறது. அதில் ஏன் முள்ளை வைத்தான் இறைவன்? என்று முனகிக் கொள்கிறோம். இது எதிர்மறையான சிந்தனை. இந்த முள்செடிக்குள் அழகான ரோஜாவை வைத்தானே என்பது நேர்மறைச் சிந்தனை. ரோஜாவையும் பறித்து, முள்ளையும் எடுத்து, முள்ளால் ரோஜாவை, தனது சட்டைப் பையில் குத்திக் கொண்டு நடப்பது நேர்மறையான சிந்தனை. நம்முடைய நாட்டில் பல பேர் எதிர்மறையான சிந்தனைகளோடும், இல்லாத அச்சங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம், எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளையே தரும். அல்லது இப்படிச் சொல்லலாம். நேர்மறையான சிந்தனை எது தருகிறதோ அதுதான் அசல் ஆன்மிகம்.
?தீய பழக்கங்களில் இருந்து மீள வழி என்ன?
– பிரபுராம், ராணிப்பேட்டை.
இருட்டை விலக்குவதற்கு ஒரே வழி அங்கே வெளிச்சம் தருகின்ற ஒரு விளக்கைப் போடுவதுதான். விளக்கைப் போடுகின்ற செயல் செய்யாத வரை, என்னதான் முயன்றாலும், இருட்டு விலகாது. அதைப் போலவே, தீய பழக்கங்களில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களைக் கைகொள்வதுதான். நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது தீய பழக்கங்கள் தானாகவே விடைபெற்றுச் சென்றுவிடும் என்பது அனுபவ உண்மை.
“நல்ல மணமுள்ளதொன்றை நண்ணி
இருப்பதற்கு நல்ல மணமுண்டாம் நயமதுபோல் நல்ல
குணமுடையோர் தங்களிடம்
கூடியிருப்பார்க்கு
குணமதுவேயாம் சேர்த்திகொண்டு’’
– என்ற பாடல் இதனை தெரிவிக்கும்.
?வாஸ்து முறைப்படி ஒரு வீட்டில் பணம், நகை, துணிமணிகளை வைத்துக்கொள்ளும் பீரோவானது எங்கு அமைய வேண்டும்?
– கு.ராஜசேகர், திருச்சி.
முதலில் இவை மூன்றையும் ஒன்றாக வைக்கலாமா என்பதைத் தெரிந்துகொள்வோம். பணம், நகை இரண்டையும் ஒன்றாக ஒரே பீரோவில் வைக்கலாம். இதில் நாம் அணியும் ஆடைகளை வைக்கக் கூடாது. ஏனென்றால் நாம் ஒரு முறை அந்த ஆடையை அணிந்தாலே நமது வியர்வையின் மூலம் நமக்குள்ளே இருக்கும் துர்குணங்களும் தோஷங்களும் அந்த ஆடையில் ஒட்டிக் கொள்ளும். வியர்வையில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். நாம் ஒரு முறைகூட அணிந்து பார்க்காத புத்தம்புதிய விலை உயர்ந்த பட்டு ஆடைகளை வேண்டுமானால் பணம் மற்றும் நகை உள்ள பீரோவில் வைக்கலாம். மற்றபடி பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை வைப்பதற்கு என்று தனியாகத்தான் ஒரு பீரோ அல்லது அலமாரியை அமைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இது குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு திசையில் உள்ள அறையில் வைத்துக் கொள்வது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் அறை ஏதும் இல்லை என்றால், நீங்கள் எந்த அறையில் பீரோவை வைக்கிறீர்களோ அந்த அறைக்குள் வடக்கு திசையில் வைப்பதும் செல்வ வளர்ச்சியைத் தரும்.
?கர்மவினை என்றால் போன ஜன்மத்தில் செய்த செயல்களின் விளைவா?
– புஜங்கராவ், மார்க்கையங்கோட்டை.
இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். இந்த ஜன்மத்தில் செய்த செயல்களுக்கு இந்த ஜன்மத்திலேயேகூட எதிர்விளைவு நேரலாம். “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதுதான் கர்மவினை. முற்பகல் என்பது போன ஜன்மமாகவும் இருக்கலாம். இந்த ஜன்மத்தில் நம் ஆயுளின் முற்பகுதியாகவும் இருக்கலாம்.
?வித்தியாசமான முருகன் கோயில் ஏதாவது இருக்கிறதா?
– ராஜாராமன், திருப்பூர்.
உண்டு. ஒரு சிலவற்றை சொல்லுகின்றேன்.
1. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
2. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.
3. முருகனுக்கு உருவமில்லாத கோயில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.
?வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் நல்லதா?
– பி.கனகராஜ், மதுரை.
வீட்டிற்குள் மனிதனைத் தவிர வேறு உயிரினங்களுக்கு அனுமதி இல்லை. தெய்வமாக மதிக்கும் பசுவினைக் கூட தோட்டத்தில் தனியாக ஒரு கொட்டகையில்தான் கட்டி வைத்திருப்போம். புதுமனை புகுவிழா நாள் அன்று மட்டும்தான் பசுவினை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வருவோம். அதேபோல குருவியும் வீட்டிற்குள் தன்னுடைய வசிப்பிடத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதேநேரத்தில் வாயிற்படி தாண்டி வெளி வராண்டா, போர்ட்டிகோ, வீட்டுத் தோட்டம் முதலான பகுதிகளில் கூடு கட்டலாம். அதில் தவறில்லை.
The post ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்? appeared first on Dinakaran.