×

நெல்லை டவுனில் வீட்டு முற்றத்தைவிட ரோட்டின் மேற்பரப்பு உயர்ந்ததால் சாலை அமைக்கச்சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லை : நெல்லை டவுனில் வீட்டு முற்றத்தைவிட ரோட்டின் மேற்பரப்பு உயர்ந்ததால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் சாலை அமைக்கச்சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் சாலைப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட டவுன் பாரதியார் தெருவில் சாலை குண்டும், குழியுமாக இருந்தது.

அந்த சாலையை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பாரதியார் தெருவில் புதியதாக சாலை அமைக்க மாநகராட்சி பணியாளர்கள் இயந்திரங்களுடன் அங்கு சென்றனர். இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் டவுன் மண்டல பாஜ தலைவர் இசக்கி ஐயப்பன் தலைமையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மாநகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது அவர்கள் வீட்டு முற்றத்தைவிட சாலையின் மேற்பரப்பு உயர்ந்து உள்ளதால் பழைய சாலையை முழுமையாக பெயர்த்து எடுத்துவிட்டு புதிய சாலை போடுமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ஏற்கனவே வீடு உள்ள மேற்பரப்பை விட சாலையின் மேற்பரப்பு உயர்ந்து உள்ளது. அதற்கு மேல் புதிய சாலை போடும் போது மேலும் உயரமாகும். குடியிருப்பு பகுதிகள் மேலும் பள்ளமாகும். மழை காலங்களில் மழை நீர் உள்பட கழிவு நீரும் வீடுகளுக்குள் வருகிறது என அதிகாரிகளிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர். ஏற்கனவே மேற்பரப்பு சாலை சுரண்டிதான் புதிய சாலை போடப்படுகிறது. முழுமையாக பழைய சாலையை அகற்ற திட்டத்தில் இடமில்லை.

கழிவுநீர் வீடுகளுக்கு வராமல் இருக்க கட்டுமான வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறோம். சாலை அமைக்க அனுமதியுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதற்கு பொதுமக்கள் உடன்பட மறுத்ததால் சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நெல்லை டவுனில் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளத்திற்குச் சென்ற நெல்லையப்பர் கோயில்

நெல்லை மாநகராட்சி தச்சை மண்டல துணை ஆணையாளர் ஜான்சன் உள்ளிட்ட அதிகாரிகள் புதிய சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில் ‘‘சாலையை உயர் மட்டத்தில் அமைத்தால் அதன் அளவுக்கு வீட்டையும் நாங்கள் உயர்த்த வேண்டியது வரும்.

அதற்கான பணம் எங்களிடம் இல்லை. நெல்லை மாநகராட்சியில் அனைத்து சாலைகளுமே பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல்தான் போடப்படுகிறது. ஒரு காலத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு படியேறி செல்வோம். இப்போது நெல்லையப்பர் கோயிலே பள்ளத்தில் இருக்கும் அளவிற்கு சாலையின் மேற்பரப்பு உயர்ந்துள்ளது’’ எனக்கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

The post நெல்லை டவுனில் வீட்டு முற்றத்தைவிட ரோட்டின் மேற்பரப்பு உயர்ந்ததால் சாலை அமைக்கச்சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nella Town ,Rice ,Nellu Town ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணி நிறைவு...