×

ம.பி.யில் 40 ஆண்டுகளுக்கு பின் யூனியன் கார்பைடு ஆலையின் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்

போபால்: மத்தியப்பிரதேசம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வெளியான விஷவாயு கசிவில் 5479 பேர் உயிரிழந்தனர். 5லட்சம் பேர் கடுமையான உடல்நலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம், தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவுகளை 4 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதபட்சத்தில் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் செயல்படாத யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து 377மெட்ரிக் டன் அபாயகரமான கழிவுகளை அகற்றும் பணியானது தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 6க்கும் மேற்பட்ட ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட, வலுவூட்டப்பட்ட கொள்கலன்களை கொண்ட லாரிகள் தொழிற்சாலையை வந்தடைந்தன. சிறப்பு பிபிஇ கருவிகளை அணிந்த பல தொழிலாளர்கள், போபால் மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்தவர்கள், மருத்தவர்கள் மற்றும் எரியூட்டும் நிபுணர்கள் அங்கு பணியில் ஈடுபட்டனர். தொழிற்சாலையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த அபாயகரமான கழிவுகள் போபாலில் இருந்து சுமார் 250கி.மீ. தொலைவில் உள்ள இந்தூர் அருகே உள்ள பிதாம்பூரில் உள்ள எரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் வருகிற 3ம் தேதிக்குள் கழிவுகள் சம்பந்தப்பட்ட இலக்கை அடையக்கூடும். முதலில் கழிவுகளின் ஒரு பகுதி எரிக்கப்படும். அதன் சாம்பலில் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதா என்பது அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யக்கூடும். எந்த பிரச்னையும் இல்லை என்றால் மூன்று மாதங்களில் கழிவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான அனைத்து ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ம.பி.யில் 40 ஆண்டுகளுக்கு பின் யூனியன் கார்பைடு ஆலையின் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Union Carbide ,Bhopal ,Madhya Pradesh ,Union Carbide plant ,Madhya Pradesh High Court ,Dinakaran ,
× RELATED 40 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்ட...