×

இந்தியா – ஆஸி டெஸ்ட் இழுபறி திக்… திக்… மனதில்! உச்சக்கட்ட டென்ஷனில் ரசிகர்கள்

மெல்போர்ன்: இந்தியாவுடனான 4வது டெஸ்டின் 4வது நாளான நேற்று, ஆஸி அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இரு அணிகளும் வெல்ல சமவாய்ப்பு காணப்படுவதால் ரசிகர்கள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளனர். ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழந்து 358 ரன் எடுத்திருந்தது. நிதிஷ் குமார் ரெட்டி 105, முகம்மது சிராஜ் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. மேலும் 11 ரன்களே சேர்ந்த நிலையில் நிதிஷ் குமார், லயன் பந்தில் எல்பிடபிள்யு ஆகி, 114 ரன்னில் அவுட்டானார். இதனால் 369 ரன்களுடன் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து ஆஸி, 2வது இன்னிங்சை தொடர்ந்தது. துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 8 ரன் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் கிளீன் போல்ட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 21 ரன்னில் முகம்மது சிராஜிடம் வீழ்ந்தார். அதன் பின்பும், ஸ்டீவன் ஸ்மித் 13, டிராவிஸ் ஹெட் 1, மிட்செல் மார்ஷ் 0, அலெக்ஸ் கேரி 2 ரன்னில் தொடர்ச்சியாக அவுட்டாகி ஆஸி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர். இருப்பினும் மார்னஸ் லபுஷனே 70, கேப்டன் பாட் கம்மின்ஸ் 41 எடுத்து அணியின் மானத்தை காப்பாற்றினர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி, 9 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது. நாதன் லயன் 41, ஸ்காட் பொலண்ட் 10 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா 56 ரன் தந்து 4 விக்கெட், முகம்மது சிராஜ் 66 ரன் தந்து 3 விக்கெட் வீழ்த்தினர்.

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஆஸ்திரேலியா 333 ரன் முன்னிலையில் உள்ளதால் இந்தியாவை சொற்ப ரன்னில் சுருட்டி வெற்றி பெறும் முனைப்பில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இன்றைய போட்டியின் துவக்கத்திலேயே ஆஸியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி, சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினால் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பும் உள்ளது. இரு அணிகளும் இந்த போட்டியை வெல்லும் சூழ்நிலை காணப்படுவதால் இரு தரப்பு ரசிகர்களும் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர்.

சாதனை மேல் சாதனை
ஆஸியுடனான 4வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 44வது டெஸ்டில் ஆடிக்கொண்டிருக்கும் அவர், ஆஸியின் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 200வது விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் சர்வதேச அளவில் பும்ரா 4ம் இடத்தில் உள்ளார். இந்திய அளவில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

200 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, மிகக்குறைந்த சராசரி ரன்னாக 20.34 தந்து முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஜோயல் கார்னரின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். தற்போது முதலிடத்தை பிடித்துள்ள பும்ரா, விக்கெட்டுக்கு சராசரியாக 19.56 ரன் மட்டுமே தந்துள்ளார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ஜெய்ஸ்வால்
ஆஸி பேட்டிங்கின்போது, இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று முறை கேட்சை தவற விட்டு, ரசிகர்களின் மனதை நோகச் செய்தார். ஆஸியின் உஸ்மான் கவாஜா அடித்த பந்தை முதல் முறையாக ஜெய்ஸ்வால் தவற விட்டார். பின், லபுஷனே 46 ரன்னில் இருந்தபோது, கிடைத்த மிக எளிய கேட்சையும் ஜெய்ஸ்வால் பிடிக்காமல் போனது டென்ஷனை கிளப்பியது. தேனீர் இடைவேளைக்கு சற்று முன், ஆஸி கேப்டன் கம்மின்ஸ் அடித்த பந்து கைக்கெட்டும் துாரத்தில் வந்தபோதும் ஜெய்ஸ்வால் மிஸ் செய்தது, இந்திய கேப்டன் ரோகித்தை ரொம்பவே அப்செட் செய்தது. இதனால், ஆஸியின் ரன் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. மூன்று கேட்சுகளையும் ஜெய்ஸ்வால் பிடித்திருந்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி இருக்கும் என போட்டியை பார்த்த ரசிகர்கள் வேதனையுடன் பேசிக் கொண்டனர்.

The post இந்தியா – ஆஸி டெஸ்ட் இழுபறி திக்… திக்… மனதில்! உச்சக்கட்ட டென்ஷனில் ரசிகர்கள் appeared first on Dinakaran.

Tags : INDIA ,TEST ,Melbourne ,Aussie ,Australia ,Aussie Test ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டின் ‘சிறந்த டெஸ்ட்...