சிட்னி: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான 5வது டெஸ்டின் 3ம் நாளில் இந்தியா 157 ரன்னுக்குள் சுருண்டது. 2ம் இன்னிங்சை ஆடிய ஆஸி சிறப்பாக ஆடி, வெற்றிக்கு தேவையான 162 ரன்னை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்தது. முதலில் களமிறங்கிய பும்ரா தலைமையிலான இந்திய அணி, 185 ரன்னில் சுருண்டது. அதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி 181 ரன் எடுத்து 4 ரன் பின் தங்கியது. அதன் பின் 2ம் இன்னிங்சை ஆடிய இந்தியா மிக மோசமாக ஆடி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 3ம் நாளான நேற்று களத்தில் இருந்த இந்திய வீரர்கள் ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் மேலும் 6 ரன்களே சேர்ந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் தந்து 13 ரன்னில் அவுட்டானார். அடுத்த விக்கெட்டாக வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் பேட் கம்மின்ஸ் பந்தில் கிளீன் போல்டானார். பின் முகம்மது சிராஜ் 4 ரன்னுடன் பொலாண்ட் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் தந்து நடையை கட்டினார்.
கடைசி விக்கெட்டாக கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ரன் எடுக்காமல் பொலாண்ட் பந்தில் கிளீன் போல்டாக அத்துடன் இந்தியாவின் இன்னிங்சும் கிளீன் போல்ட் ஆகி முடிவுக்கு வந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 157. ஆஸி தரப்பில் ஸ்காட் பொலாண்ட் 6, பேட் கம்மின்ஸ் 3, பியு வெப்ஸ்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி துவக்க வீரர்கள் சாம் கோன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 3.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 39 ஆக இருந்தபோது 22 ரன்னில் கோன்ஸ்டாஸ், பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். பின்னர் வந்த மார்னஸ் லபுஷனே 6 ரன்னில் பிரசித் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர் கவாஜா 41 ரன்னில் முகம்மது சிராஜ் பந்தில் பண்ட்டிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டாக ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்னில் பிரசித் கிருஷ்ணாவிடம் வீழ்ந்தார். அப்போது ஆஸி ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 104. அதன் பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், பியு வெப்ஸ்டர் அற்புதமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
27 ஓவர் முடிவில் ஆஸி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் 34, வெப்ஸ்டர் 39 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பிரசித் 3, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் 10 விக்கெட் வீழ்த்திய பொலாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வானார். இந்த வெற்றியை அடுத்து, வரும் ஜூனில் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான (டபிள்யுடிசி) இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் இந்தியா பறிகொடுத்துள்ளது. அதே சமயம் இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸி, டபிள்யுடிசி இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஆடும் மற்றொரு அணியாக தென் ஆப்ரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.
The post ஆஸியுடன் 5வது டெஸ்டில் இந்தியா; டோட்டல் சரண்டர்!: டபிள்யுடிசி இறுதிக்கும் பறிபோனது வாய்ப்பு appeared first on Dinakaran.