×

கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பொங்கல் பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

 

Southern Railway, Rameswaram, Coimbatore

  • தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : பொங்கல் பண்டிகைக்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் சொந்த ஊரான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் திரும்புவதற்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பனியன், பஞ்சு நூற்பாலை, மோட்டார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதுதவிர திருச்செங்கோடு, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர்.

பொங்கல் விடுமுறை ெதாடர்ச்சியாக 3 நாட்களுக்கு ேமல் வருவதால் மாணவர்கள், தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பார்க்கவும், பண்டிகையை கொண்டாடவும் சொந்த ஊர்களுக்கு நேரடியாக செல்ல ரயில் வசதி இல்லை.பொங்கல் பண்டிகையை கொண்டாட கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் உள்ள பஸ் ஸ்டாண்டுகளிலும், டெப்போக்களின் முன்பும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலம் ஆண்டுதோறும் நீடிக்கிறது.

பஸ் வசதியும் போதுமான அளவில் கிடைக்காததால் பல குடும்பங்கள் 6 மணி நேரத்திற்கு மேல் பஸ்களில் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அடக்கி கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சர்க்கரை வியாதி, மூட்டுவழி நோயால் அவதிப்படுபவர்கள் நீண்ட நேரம் பஸ் சீட்டுகளில் அமர்ந்து பயணம் செய்ய முடியாது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், ‘மதுரையிலிருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, வழியாக போத்தனூர் வரை அகலப்பாதை பணிகள் முடிந்து கோயம்புத்தூருக்கு ரயில் போக்குவரத்து துவங்கி பல ஆண்டுகளாகிறது. பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை அகலப்பாதை பணிகள் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ராமேஸ்வரம் வரை மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேலை, படிப்பிற்க்காக சென்றவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ரயில் வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

இதனால் தென்மாவட்ட மக்களுக்கு பண்டிகைக் கால ரயில் பயணம் கனவாகவே இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் போல ஈரோடு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயிலை இயக்கினால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவர். தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் விட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

The post கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பொங்கல் பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rameswaram ,Pongal festival ,Manamadurai ,Tiruppur ,Ramanathapuram ,Sivaganga ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி...