×

ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு, கிராம மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால், மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே இருந்த செம்மண் சாலை நீரில் மூழ்கியது. இதனால், இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, மங்களம், பெருமாள் பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலை வழியாக ஆரணிக்குச் சென்று அங்கிருந்து கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் சென்று வருவார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியது. மேலும், இதனால் ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும், நந்தனம் மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஓடை வழியாக வந்து ஆரணி ஆற்றில் கலந்தது. இந்த தண்ணீர் சுருட்டப்பள்ளி அணைக்கட்டிற்கு வந்து தேக்கி வைக்கப்பட்டு, அதன் உபரிநீர் வெளியேறி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மங்களம், ஆரணி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இதனால், மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே இருந்த செம்மண் சாலை மூழ்கியது.

மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெரியபாளையம், ஆரணி அரசு மற்றும் தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் ஆரணியாற்றின் குறுக்கே செம்மண் சாலையை கடந்துதான் செல்லவேண்டும். ஆனால், தற்போது செம்மண் சாலை அடித்து செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் செம்மன் சாலை இருந்த தடத்தின் மீது ஆற்றை கடந்து ஆபத்தான முறையில் செல்கிறார்கள். எனவே, மங்களம் கிராமத்திற்கு தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோல் கடம்பத்தூரில் இருந்து மப்பேடு செல்லும் நெடுஞ்சாலையான சத்தரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் அங்குள்ள தரைப் பாலத்தை முழ்கடித்தவாறு மேலே செல்கிறது. தற்போது அந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத வகையில் தரைப்பாலத்தின் இரண்டு புறங்களிலும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளனர்.

இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து கடம்பத்தூர் வழியாக மப்பேடு, கீழச்சேரி, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், பூந்தமல்லி, அரக்கோணம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த தரைப் பாலத்தை கடக்க முடியாமல் பேரம்பாக்கம் வழியாக சுமார் 10 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு அவதியுடன் சென்று வருகின்றனர். எனவே சத்தரை தரைப்பாலத்தில் மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்த இந்த தரைப் பாலத்தை உடனடியாக சீரமைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு, கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Arani, Chattari river ,Uthukkottai ,Thiruvallur district ,Arani river ,Mangalam ,Periypalayam ,Perumal Pettai ,Arani, ,Chattari river ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின்...