*ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
சிவகிரி : சிவகிரி அருகே 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த பெண் மரணம் தொடர்பாக ஆர்டிஓ கவிதா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிப்பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன். இவரது மனைவி நிஷா நந்தினி (20). இவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நெஞ்சு வலிப்பதாக கூறி நிஷா நந்தினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிஷா நந்தினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் இந்த மரணம் தொடர்பாக முழு விவரம் தெரியும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே திருமணமான 10 மாதத்தில் பெண் மரணம் உயிரிழந்துள்ளதால் சங்கரன்கோவில் ஆர்டி கவிதா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post சிவகிரி அருகே 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த பெண் மரணம் appeared first on Dinakaran.