×

ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, ஆரணியில் புதர்கள் மண்டி மர்ம நபர்களின் பாராக மாறிவரும் பழைய கால்நடை மருத்துவமனையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆரணி பேரூராட்சி அலுவலகம் அருகில் 50 வருடத்திற்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது.

இந்த கால்நடை மருத்துவமனைக்கு ஆரணி, மங்களம், மல்லியங்குப்பம், புதுப்பாளையம், குமரபேட்டை, திருநிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக அதை வளர்ப்பவர்கள் கொண்டு வருவார்கள். இந்நிலையில், இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம் மிகவும் பழுதடைந்து, விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது.

இதனால், இந்த கட்டிடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிதிலமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு புதிய கால்நடை மருத்துவமனை பழைய கட்டிடத்தின் அருகில் அதன் வளாகத்திலேயே புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. தற்போது, கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  இந்நிலையில், பழைய ஓடு போட்ட கால்நடை மருத்துவமனை கட்டிடம் மிக்ஜாம் புயலால் மேலும் சேதமடைந்தது.

இதனை சாதகமாகக் கொண்டு இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களிலும் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் போதையில் புதிய கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும், கால்நடை மருத்துவமனையை சுற்றி தற்போது புதர்கள் மண்டிக்கிடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயன்பாடில்லாத பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

The post ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Arani Panchayat ,Uthukkottai ,Arani ,Periypalayam ,Arani… ,
× RELATED ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...