சென்னை: எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் திமுக தலைவரும்- தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
சட்டமன்றத் தேர்தல் களத்தை நாம் எதிர்கொள்ள இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கிறது. 7வது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு! சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் நம் கூட்டணி வெல்லும்; 2026ல் வெற்றி நமதுதான்! 1957ல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை! இமயமலை போன்ற தலைவர்களில் இருந்து எத்தனையோ பேர் நம்மை எதிர்த்திருக்கிறார்கள். எதிரில் நின்றவர்கள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்போது நாம் அமைத்திருக்கும் “திராவிட மாடல்” ஆட்சியும், எளிதாக அமைந்துவிடவில்லை! நடுவில் 10 ஆண்டுகள் நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது? ஒருமுறை எதிர்க்கட்சியாக கூட வரவில்லை! சோர்ந்துவிட்டோமா நாம்? வீட்டுக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்துவிட்டோமா? இல்லையே! ஒவ்வொரு நாளும் மக்களுடனே இருந்தோம்! மக்களுக்காகக் குரல் கொடுத்தோம்! வீ
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து, நாள்தோறும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்துச் செயல்படுத்தி வருகிறோம்! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, தோழி விடுதி என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல் போடும் அளவிலான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்!
நான் சவால்விட்டுச் சொல்கிறேன்… இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இவ்வளவு திட்டங்களை, இந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறதா? நிச்சயம் கிடையாது! ஒரு நாள்கூட ஆளுங்கட்சியாக நாம் ’ரிலாக்சாக’ இருந்ததில்லை! எவ்வளவு நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம். பத்தாண்டு அதிமுக ஆட்சியின் இருட்டில் இருந்து மீட்டெடுப்பதே நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டை எப்படியெல்லாம் பின்னுக்குத் தள்ளலாம் என்று யோசித்து அனைத்து வகையிலும் நெருக்கடி தரும் பா.ஜ.க.வை சமாளிக்கிறோம்!
2019ல் கொள்கைக் கூட்டணியாக சேர்ந்தோம்; தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று அனைத்திலும் வெற்றிதான்! இந்த கொள்கைக் கூட்டணிக்கு எதிராகப் பலரும் அரசியல் கணக்கு போடுகிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன். நம்முடைய கொள்கைக் கூட்டணிக்கு எதிராக அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்புக் கணக்காகத்தான் ஆகும்! வெற்றிக் கணக்கு நம்முடைய கூட்டணிக்குத்தான்.
நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்! “200 தொகுதிகளில், என்னுடைய சட்டமன்றத் தொகுதி முதலாவதாக இருக்க வேண்டும், என் தொகுதிதான் அதிக முன்னிலை பெற்ற தொகுதி என்று வர வேண்டும், என் மாவட்டத்தில், என் மாநகராட்சியில், என் ஒன்றியத்தில், என் பகுதியில், என் பேரூரில், என் ஊராட்சியில், என் வார்டில்தான் அதிக முன்னிலை வாங்கியது” என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்!
அடுத்து, கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார்! அம்மையார் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுவது போன்று அது இருக்கிறது. ‘காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும்’ பழனிசாமி – “கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது” என்று உளறி இருக்கிறார். இல்லாததை இருப்பதுபோல் ஊதிப் பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்குக் கைவந்த கலைதான்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்கியது.
இதுவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. 14 தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. நியாயமாகப் பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. எளிமையாகச் சொன்னால், 2019ல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அதிமுக- 2024ல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்குச் சாதாரண கூட்டல்-வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பிப் பொய்க் கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுககாரர்களே கேட்டு சிரிக்கிறார்கள். அதிமுக-பா.ஜ. – புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும், ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது!
இது இன்று நேற்றல்ல 75 ஆண்டுகளாக நாம் எதிர்கொள்ளும் சவால். மகளிரிடம் நம்முடைய ஆட்சி மேல் பெரும் நம்பிக்கை இருக்கிறது. அதை முழுமையாக நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற வேண்டும்! புதிய வாக்காளர்களான இளைஞர்களின் நம்பிக்கையையும்-மனதையும் வெல்ல வேண்டும்! அதற்கு, அவர்களுக்கான மொழியில் பேச வேண்டும்! தொடர்ந்து டிரெண்ட்-இல் இருக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் வரலாற்றில் சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வார்கள். எதிர்காலத்தில் எழுதப்போகும் வரலாற்றில், மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் திமுகவின் ஆட்சிக்காலம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும்! தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு சிவப்புக்காரர்கள் என்று சொல்ல வேண்டும்! நம் முழக்கம், வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் பேசினார்.
* பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? கிடையாது. திமுக என்றால் மட்டும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கத்திப் பேசுகிறார். கத்திப் பேசினால் தன்னை ஜெயலலிதா என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். எம்.ஜி.ஆர். போல் தன்னுடைய கட்சிக்காரர்கள் அவரை நினைப்பார்கள் என்று நம்புகிறார்.
பழனிசாமி என்னதான் கத்தினாலும் எப்படித்தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும் குற்றங்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். துரோகத்தைத் தவிர உங்களுக்குப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? திமுகவின் வரலாறு தியாகம். பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம். அவர், பாதம்தாங்கி பழனிசாமி மட்டுமல்ல; பயந்தாங்கொள்ளி பழனிசாமி! இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி. நேரடிக் கூட்டணி அமைத்து வந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் இவர்கள் பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
The post எதிர்க்கட்சிகள் தனித்தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக வந்தாலும் சரி திமுக கூட்டணிதான் 2026 தேர்தலில் வெல்லும்: சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.