×

மன்மோகன் சிங் மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: மன்மோகன் சிங் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இமாலயப் பொறுமைக்கு இலக்கணம் வகுத்தவரும், எளிமையானவரும், உலக நாட்டுத் தலைவர்களிடையே மதிப்பையும் பெற்றிருந்த மாமனிதர் மன்மோகன் சிங் மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அந்த பெருந்தகை மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

* தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, நெடுஞ்சாலை, துறைமுகம் என கட்டமைப்புகளை ஏற்படுத்தி அந்நிய முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்பை பெருக்கியவர் மன்மோகன் சிங். இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.

* இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வன உரிமை சட்டம் போன்ற சமூக நலன் பேணும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் பொது வாழ்வில் எளிமை, நேர்மை, துணிவுக்கு அடையாளமாக வாழ்ந்து வந்த மன்மோகன் சிங் மறைவு, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும்.

* விசிக தலைவர் திருமாவளவன்: இந்திய சனநாயகத்தை பாதுகாப்பதிலும்; இந்தியாவை பொருளாதாரத்தில் வலிமைபெற செய்வதிலும் மிக கவனமாகவும் உறுதியாகவும் இருந்தவர் மன்மோகன் சிங். குறிப்பாக, இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதற்கு ஏதுவாக தாராளமய பொருளாதார நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர். விசிக சார்பில் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

* அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பெரும்பங்கு வகித்த மன்மோகன் சிங்கை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

* அதேபோல், புதிய நீதிக் கட்சி ஏ.சி.சண்முகம், கோகுல மக்கள் கட்சி எம்.வி.சேகர், விஜி சந்தோசம், திருநாவுகரசர், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, விஜய் வசந்த் எம்.பி, உள்ளிட்டோர் தங்களின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post மன்மோகன் சிங் மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு..!!