×

எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள் சாட்டையால் அடித்துக்கொண்டு காமெடி போராட்டம் நடத்துகின்றனர்: அண்ணாமலை மீது காங்கிரஸ் தாக்கு

சென்னை: எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள், பிழைப்புக்காக சாட்டையால் அடித்து காமெடி போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் எஸ்சி துறை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இருந்ததற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையே சாட்சி.

இன்று பாதிக்காகப்பட்ட பெண்களே தானாக முன்வந்து புகார் அளிக்கிறார்கள் என்றால் அது முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கைதான். பெண்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு அரணாக என்றும் இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. காவல்துறை தன்னிச்சையாகவும் விரைவாக செயல்பட்டு கொடூரனை கைது செய்துள்ளது. அதற்காகப் பாராட்ட வேண்டாம், களங்கப்படுத்தாமலாவது இருக்கலாமே? அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் செய்வது நியாயமானது. ஆனால் அரசு இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்த பின்பும் போராட்டம் செய்வது எதற்காக?.

மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கண்டித்து அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளாதது ஏன்? 5 வயது குழந்தையை பாலியல் வன்புனர்வு செய்த உத்தரகாண்ட் முன்னாள் பாஜக தலைவர் பிரமோத் குப்தாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த போது, எங்கே போயிருந்தீர்கள் அண்ணாமலை?. எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள், பிழைப்புக்காக சாட்டையால் அடித்துக் கொள்வது போன்ற காமெடி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் விரைவில் மக்கள் மத்தியில் நகைப்புக்கு ஆளாவார்கள் என்பது உறுதி. அதேசமயம், பொள்ளாச்சி கூட்டுப் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றிய எடப்பாடி பழனிசாமியும், பாலியல் ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவராக இருக்கும் அண்ணாமலையும் போராடவே தகுதியற்றவர்கள். இவர்களது கபட நாடகத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

The post எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள் சாட்டையால் அடித்துக்கொண்டு காமெடி போராட்டம் நடத்துகின்றனர்: அண்ணாமலை மீது காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,Congress SC ,Tamil Nadu Congress SC ,president ,M.P. Ranjan Kumar ,AIADMK… ,
× RELATED பட்டியலின மக்களுக்கு எதிராக...