பரமக்குடி, டிச.19: பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், பரமக்குடி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரமக்குடியை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் தங்கராஜ் வரவேற்றார். நகராட்சி பொறியாளர் செல்வராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெரு விளக்குகள்,சுகாதார பணிகள் முறையாக நடைபெற வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நகராட்சி பொறியாளர், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் சரி செய்யப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் என தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும். மேலும், சுகாதார அதிகாரிகளும் தினமும் ஒரு பகுதிக்கு சென்று பணிகளை கண்காணித்து வருகின்றனர் எனக் கூறினார்.
மேலும், பரமக்குடியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அஞ்சல் பிரிப்பகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வரவு செலவு மற்றும் தீர்மானங்களை நகராட்சி அலுவலர் ராஜராஜேஸ்வரி வாசித்தார். நகராட்சி வழக்குகளை கையாள்வதற்காக புதிய வழக்கறிஞராக ஜானகி ராமன் நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெருநாய்களை பிடிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.தெரு நாய்கள் மற்றும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.