×

மாவட்டத்தில் தொடர் மழை 2 ஆண்டுக்கு பின் தூசூர் ஏரி நிரம்பியது

நாமக்கல், டிச.16: நாமக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, தூசூர் பெரிய ஏரி 2 ஆண்டுக்கு பின் நிரம்பியது. மேலும் மாவட்டத்தில் உள்ள 23 ஏரிகள் முழுமையாக நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் 3 நாட்களில் 506 மில்லி மீட்டர் மழை பதிவானது. கொல்லிமலையில் பெய்த கனத்த மழையால், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள கருவாட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடிவாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பியது. பழையபாளையம் ஏரி நிரம்பி, தண்ணீர் அங்கிருந்து நாமக்கல் அருகே தூசூர் ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தூசூர் ஏரி முழுமையாக நிரம்பியது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், தூசூர் ஏரி மிகப்பெரிய ஏரியாகும். தூசூர் ஏரியின் முழு கொள்ளளவு 66.87 மில்லியன் கனஅடி. இந்த ஏரியின் மூலம் 542.82 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது ஏரி மீண்டும் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று நிரம்பி வழியும் ஏரியை வேடிக்கை பார்த்தனர். அப்போது, ஏரி தண்ணீரில் அடித்து வரப்படும் மீன்களை சிலர் ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், ஏரிக்கு வந்து மீன்களை பிடித்து சென்றனர். ஏரி முழுமையாக நிரம்பியதால், தண்ணீர் கடைக்கால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில், தற்போது வரை 23 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இதில், 4 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகதண்ணீர் உள்ளது. 25 சதவீதத்துக்கு அதிகமாக 4 ஏரிகளும், 50 சதவீதத்துக்கு அதிகமாக 3 ஏரிகளும், 75 சதவீதத்துக்கும் அதிகமாக 7 ஏரிகளும் தண்ணீர் நிரம்பியுள்ளன. தூசூர் ஏரி உள்பட 23 ஏரிகள், முழு கொள்ளளவான 100 சதவீதம் நிரம்பியுள்ளன. இதனால், இப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியும்,’ என்றனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில், தற்போது பெய்த மழையால் 60 சதவீத ஏரிகள் வரை நிரம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே, விவசாயிகள் வயல்களில் நாற்று நட்டுள்ளனர். சேந்தமங்கலம், நாமக்கல், ராசிபுரம் தாலுகாவில் முழுக்க ஏரி பாசனத்தை நம்பித்தான் விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது ஏரிகள் நிரம்பியுள்ளதால், அது விவசாயத்துக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் வரத்து இல்லை. இதற்கான காரணத்தை கண்டறிந்து, அங்கு மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post மாவட்டத்தில் தொடர் மழை 2 ஆண்டுக்கு பின் தூசூர் ஏரி நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Dusur lake ,Namakkal ,Namakkal district ,Dusur ,Penjal ,Dinakaran ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பள்ளிக்கு...