×

மனைவி தூக்குபோட்டு இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவர் தற்கொலை: பரங்கிப்பேட்டை அருகே சோகம்

 

புவனகிரி, டிச. 16: மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து, வெளிநாட்டில் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் சிங்கப்பூர் நாட்டில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவுரி(28). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த மாதம்தான் பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக கவுரி, வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்கிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சத்திரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கவுரியின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டனர்.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சென்று உயிரிழந்த கவுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரி எதற்காக இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மனைவி இறந்ததை அறிந்த சிங்கப்பூரில் இருந்த பன்னீர்செல்வம், அங்கு தூக்குபோட்டு கொண்டார். பின்னர் அவருடன் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிதம்பரம் சப்-கலெக்டர் ரஷ்மிராணி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவுரியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பன்னீர்செல்வத்தின் உடல் வெளிநாட்டிலிருந்து இன்று வர உள்ளதாகவும், அதன் பிறகே கவுரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கவுரியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி இறந்ததும், அதை அறிந்த அவரது கணவர் வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post மனைவி தூக்குபோட்டு இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவர் தற்கொலை: பரங்கிப்பேட்டை அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Parangipettai ,Bhuvanagiri ,Panneerselvam ,Athiyanallur ,Cuddalore district ,
× RELATED பிச்சாவரத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்