×

வங்கி கணக்கில் இருந்து உடனே பணம் அபேஸ் `ஜம்ப்டு டெபாசிட்’ புதுவகை சைபர் குற்றம்

புதுச்சேரி, டிச. 12: ஜம்ப்டு டெபாசிட் (ஜேடி) என்ற பெயரில் புதுவகையான சைபர் குற்றங்கள் தொடர்பாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு: ஜம்ப்டு டெபாசிட் (ஜேடி), சைபர் குற்றங்களில் இது லேட்டஸ்ட் ரிலீஸ். கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ வாடிக்கையாளர்களை குறி வைத்து நடத்தப்படும் சைபர் க்ரைம் இது. முதலில் உங்கள் கணக்கில் ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்படும். நிஜமாகவே, அவ்வாறு வரவு வைக்கப்பட்டதற்காக ஒரு எஸ்எம்எஸ் வரும். நாமும் ஆர்வமாக எங்கிருந்து பணம் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முற்படுவோம்.

இதற்கிடையில், உங்களுக்குப் பணம் அனுப்பியவர் ஒரு வித்ட்ராவல் ரெகியுஸ்ட்-ம் அனுப்பி இருப்பார். அவசரமாக நீங்கள் யுபிஐ செயலியை திறந்து பின் என்டர் செய்து விட்டால் மேட்டர் ஓவர். அவர் அனுப்பிய வித் ட்ராவல் ரெகியுஸ்ட் அக்செப்ட் ஆகிவிடும். இதன் மூலம் ஒரு பெரிய தொகை கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து காணாமல் போய்விடும். என்ன நடக்கிறதென்று புரிவதற்குள் எல்லாமும் முடிந்து விடும். கொத்துக் கொத்தாக இந்த ஜே.டி க்ரைமில் மக்கள் ஏமாந்து வருகின்றனர். இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? பணம் வந்து இருக்கிறது என எஸ்எம்எஸ் வந்தால், உடனே யுபிஐ செயலியை திறக்கக் கூடாது. குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், எந்தவொரு வித்ட்ராவல் ரெக்யுஸ்ட்-ம் “வேலிடிட்டி டைம்” என்று ஒன்றுள்ளது. நீங்கள் அரை மணி நேரம் காத்திருப்பதால், அவர்கள் அனுப்பியுள்ள ரெக்யுஸ்ட் காலாவதி ஆகிவிடும்.

எனவே, பணம் வந்து இருக்கிறது என்று தெரிந்தபின், “யார், என்ன, ஏன்” என்று தெரியாமல் காத்திருப்பது கடினம், பலராலும் முடியாது. சாதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்கள் வந்தாலே பார்க்காமல் இருப்பது சிரமம். பணம் வந்திருக்கிறது என்றால் நெவர் இம்பாசிபிள். இந்த உளவியல் தந்திரம் தான் ஜம்ப்டு டெபாசிட் கிரைமின் தூண்டில். இதில் சிக்காமல் இருக்க வேண்டும். “ஒரு பொய் சொன்னா, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்” சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இவ்வசனம் வரும். ஏமாற்றுபவர்களின் ஆயுதம் பொய் மட்டுமல்ல. அதில் கலந்திருக்கும் சிறுதுளி உண்மையும். ஜம்ப்டு டெபாசிட்டுக்கும் இது பொருந்தும். எனவே, இந்த புதுவகையான சைபர் குற்றங்களில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி புதுச்சேரி சைபர் கிரைம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் கேட்டபோது, இந்த புதுவகையான ஜம்ப்டு டெபாசிட் புதுச்சேரியில் நடந்ததாக புகார் வரவில்லை. இருப்பினும், இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

The post வங்கி கணக்கில் இருந்து உடனே பணம் அபேஸ் `ஜம்ப்டு டெபாசிட்’ புதுவகை சைபர் குற்றம் appeared first on Dinakaran.

Tags : `Jumped ,Puducherry ,Puducherry Cyber Crime Police ,Dinakaran ,
× RELATED இணையத்தை கலக்கும் புதுவகை சைபர்...