*சின்னாறு அணை தண்ணீரை திறந்துவிட கோரிக்கை
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பெய்தும் தும்பல அள்ளி அணைக்கு போதிய தண்ணீர் வரத்தின்றி வறண்டு போய் காணப்படுகிறது. சின்னாறு அணையிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பல அள்ளி அணை உள்ளது.
45 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 131 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். வடகிழக்கு பருவமழை சீசனில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரையில் நீர்வரத்து இருக்கும்.
இந்த நீரை பயன்படுத்தி பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியங்களில் 2,617 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. கடந்த 2022ம் ஆண்டு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் 18 ஆண்டுக்கு பின்பு அணை நிரம்பியது. இதையடுத்து, சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையின் வலது கால்வாயில் எண்ணேகொல்புதூர் பகுதியில் இருந்து கால்வாய் நீட்டிப்பு செய்து தும்பல அள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு வந்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என தொடர்ந்து 30 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதன் பலனாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தொடர்ந்து ₹233 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில ஆர்ஜித பணிகள் மேற்கொள்ள கடந்த 2019ம் ஆண்டு அரசாணை வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் உள்ள 76 நில உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் கால்வாய் வெட்டும் பணிக்கு நிலம் தர சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு, கால்வாய் வெட்டும்பணி நடந்தது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலம் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 30ம்தேதி முதல் 4ம் தேதி வரை கன மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, ஈச்சம்பாடி அணைகட்டு, வள்ளிமதுரை அணைகள் நிரம்பின. கேசர்குழி அணை, நாகாவதி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், தும்பல அள்ளி அணைக்கு போதிய தண்ணீர் வரத்தில்லை. இதனால், அணை குட்டைபோல் காணப்படுகிறது.
அதேவேளையில், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி, உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை தும்பலஅள்ளி அணைக்கு திருப்பி விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சமீபத்தில் பெய்த கனமழையால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.
ஆனால், தும்பலஅள்ளி அணைக்கு மட்டும் தண்ணீர் வரத்தில்லை. மேய்ச்சல் தரையாகவே உள்ளது. எனவே, எண்ணேகொல்புதூர் – தும்பலஅள்ளி நீர்பாசன திட்டத்தை விரைவாக முடித்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைக்கு விவசாய நிலத்தை பாதுகாக்க சின்னாறு அணையில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கன மழை காரணமாக 546 ஏரிகளில் 172 ஏரிகள் நிரம்பியுள்ளன. 61 ஏரிகளில் 75 சதவீத அளவிற்கு தண்ணீர் உள்ளது. 504 குளங்கள் மாவட்டத்தில் உள்ளது. இதில், 183 குளங்கள் நிரம்பியுள்ளன. அதுபோல் 109 குளங்களில் 75 சதவீத அளவிற்கு தண்ணீர் உள்ளது. அரூர் பகுதியில் 50 சென்டி மீட்டர் மழை பெய்தது.
இதனால், அப்பகுதியில் உள்ள 107 ஏரிகளில், 96 ஏரிகள் 100 சதவீதம் அளவிற்கு நிரம்பியுள்ளன. மேலும், 102 குளங்களும் நிரம்பியுள்ளன. ஆனால், தும்பல அள்ளி அணைக்கு மட்டும் தண்ணீர் வரத்தில்லை. வறண்டு போய் காணப்படுகிறது. இதையடுத்து, எண்ணெகோல்புதூர் -தும்பல அள்ளி அணை பாசனத்திட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றனர்.
7 ஆண்டுகளில் கட்டிய அணை
காவிரியில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில், கடந்த 1979ம் ஆண்டு தும்பலஅள்ளி அணை கட்டும் பணியை பொதுப்பணித் துறை தொடங்கியது. 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான 1986ம் ஆண்டு முடித்தது.
The post கனமழை பெய்தும் வறண்டு கிடக்கும் தும்பலஅள்ளி அணை appeared first on Dinakaran.