×

வாணியம்பாடி வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி பயன்பாட்டுக்கு வராத புதிய பேருந்து நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தைக்கு ஜமுனாமரத்தூர், காவலூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை, ஆம்பூர், மாதனூர், நாட்றம்பள்ளி, பச்சூர் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம், மல்லானூர், வி.கோட்டா, பலமனேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

வியாபாரிகளால் இங்கிருந்து வாங்கப்படும் மாடுகள் கேரளா, பெங்களூரு, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமையான நேற்று வழக்கம்போல் மாட்டுச்சந்தை நடந்தது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை நடந்துள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட மாடு வியாபாரிகள் சங்க தலைவர் கருணாகரன் கூறுகையில், இன்று(நேற்று) சந்தையில் கறவை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையிலும், சினை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், காளை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.10 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை நடந்துள்ளது என்றார்.

The post வாணியம்பாடி வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi Warachanda ,Vaniyampadi ,Chennai-Bangaluru National Highway ,Setiappanur ,Tirupathur district ,Vaniyambati Warachanda ,
× RELATED தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.20...