டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சிப் படை நுழைந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிபர் அல்ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில் கிளர்ச்சிப்படை எதிர்ப்புகளின்றி முன்னேறி வருகிறது. டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சிப்படை நுழைந்துள்ள நிலையில் அதிபர் அல்ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. எனினும், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு (6 லட்சம்) என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது. சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
இந்நகரை கைப்பற்றினால், கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசு படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
The post சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைந்த கிளர்ச்சிப் படை: அதிபர் அல்ஆசாத் தப்பி ஓட்டம்? appeared first on Dinakaran.