×

கோவை அரசு மருத்துவமனையில் சேதமடைந்த சாலையால் நோயாளிகள் கடும் அவதி: நிதி அளித்தும் பணி துவங்குவதில் காலதாமதம்

கோவை, டிச. 5: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகள் பிரிவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.287 கோடியே 56 லட்சத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய 6 மாடி புதிய உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை கட்டிடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது. தவிர, கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை மூலம் அரசு சார்பில் தனியார் தரத்திற்கு சிகிச்சைகள் வழங்கி வரும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு வார்டில் இருந்து நோயாளியை மற்றொரு வார்டிற்கு மாற்றும் போது இந்த சாலையில் அவர்களை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் கூட சாலையை விரைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து பயன்படுத்த தகுதியில்லாத நிலையில் இருக்கிறது. இந்த சாலையால் பிரசவ வலியுடன் 108 ஆம்புன்சில் வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க அரசு சார்பில் ரூ.9.65 கோடி நிதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், சாலையை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலையை கடக்க முடியாமல் நோயாளிகள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். டெண்டர் பிரச்னையால் சாலை சீரமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மோசமான சாலையால் நோயாளிகள், டாக்டர்கள், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என நோயாளிகள், மருத்துவமனை பணியாளர்கள், டாக்டர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில்,“மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலை ரூ.9.65 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது.

இதற்கான டெண்டர் பணிகள் முடிந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த ஒரு வாரத்தில் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post கோவை அரசு மருத்துவமனையில் சேதமடைந்த சாலையால் நோயாளிகள் கடும் அவதி: நிதி அளித்தும் பணி துவங்குவதில் காலதாமதம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Government Hospital ,Coimbatore ,Coimbatore Government Medical College Hospital ,Tirupur ,Nilgiris ,Kerala ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு