×

வெளியூர் பஸ்கள் வராததால் பழைய பஸ் ஸ்டாண்டில் 2 ஓட்டல்கள் மூடல்

நாமக்கல், டிச.3: நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கடந்த 10ம் தேதி முதல் அனைத்து புறநகர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. நாமக்கல் நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில், மாநகராட்சி மூலம் கட்டி கொடுக்கப்பட்ட 127 கடைகள் உள்ளன. இந்த கடைகளை மாநகராட்சி மூலம் ஒதுக்கீடு பெற்றவர்கள் மாதம் தோறும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி கடைகளை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் கடைகளை உள்வாடகைக்கு விட்டு லாபம் பார்த்து வந்தனர். பஸ் ஸ்டாண்டுக்குள் 2 சைவ ஓட்டல்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. தற்போது பஸ் ஸ்டாண்டுக்குள் அதிகளவில் பஸ்கள் வராததால், பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து கடைகளிலும் வியாபாரம் குறைந்துவிட்டது.

திருச்சி, துறையூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமாவது பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் விடவேண்டும் என வணிகர்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதையேற்க தனியார் பஸ் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். பஸ்கள் வரக்கோரி வணிகர்கள் ஒருநாள் கடை அடைப்பு போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், வியாபாரம் குறைந்துவிட்டதால், கடந்த இரு வாரத்துக்கு முன் ஒரு ஓட்டல் மூடப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் ஒரு ஓட்டல் மூடப்பட்டுவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஓட்டல் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இயங்கி வந்தது. தினமும் ₹50 ஆயிரம் முதல் ₹60 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெற்று வந்தது. 25 பேர் வேலை செய்து வந்தனர். ஆனால் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் செல்ல துவங்கியது முதல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.

இதனால் ஓட்டலில் வியாபாராமும் குறைந்தது. தினமும் ₹4 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரையே விற்பனையானது. இதனால் ஓட்டல் உரிமையாளர் கணேசன் ஓட்டலை மூடிவிட்டார். அவர் கடையில் வேலை செய்து வந்த அனைவருக்கும் நகரில் உள்ள வெவ்வேறு ஒட்டல்களில் வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ஓட்டலை மூடுவதற்கான கடிதத்தை மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டார். நாமக்கல் பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள பல்வேறு கடைகளின் நிலை இப்படி தான் உள்ளது. வியாபாரம் குறைந்துவிட்டதால் வேலையாட்களையும் குறைத்து வருகின்றனர். கடைகளை மூடப்போவதாக உரிமையாளர்கள் கூறியதால், உள்வாடகைக்கு விட்டவர்கள் வாடகையை சற்று குறைத்து கொண்டதால், சிலர் கடைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

The post வெளியூர் பஸ்கள் வராததால் பழைய பஸ் ஸ்டாண்டில் 2 ஓட்டல்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Adalur ,NAMAKAL ,NAMAKKAL VASHIPATTI ,Namakkal ,Bangalore ,Dinakaran ,
× RELATED செல்போனுக்கு பதில் வாசனை திரவியம்: வாடிக்கையாளருக்கு ரூ.44,519 தர ஆணை