×

எஸ்பிஐ ரிவார்ட்ஸ் என்ற பெயரில் புதிய மோசடி; ஆன்லைனில் பணம் வரும் என்பதை நம்பவேண்டாம்: பொதுமக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

நாமக்கல், டிச. 3: எஸ்பிஐ ரிவார்ட்ஸ் என்ற பெயரில் புதிய மோசடி நடந்து வருவதால், அதனை நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு நாமக்கல் எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்த, மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சைபர்கிரைம் போலீசார் நேரில் சென்று, இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி வருகின்றனர். இருப்பினும் ஆன்லைன் மூலம் பணத்தை பறி கொடுத்தவர்கள், தினமும் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்த வண்ணம் இருக்கிறார்கள். செல்போன் திருட்டு, பகுதிநேர வேலை என்ற பெயரில் அளிக்கப்படும் டாஸ்க்கில் பணத்தை பறிகொடுப்பது நாமக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

இணையவழி குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, காவல்துறை போதிய விழிப்புணர்வுவை ஏற்படுத்திய போதிலும், பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக ஆன்லைனில் பணத்தை இழக்கின்றனர். போன்பே, கூகுள்பே போன்றவற்றை அனைவரும் சரளமாக பயன்படுத்த தொடங்கிவிட்டதால், அதன் மூலம் ஆன்லைனில் பணத்தை பறிகொடுப்பதும் அதிகரித்து வருகிறது. தற்போது, எஸ்பிஐ ரிவார்ட்ஸ் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு ஆப் உலா வருகிறது. இதை டவுன் லோடு செய்து நண்பர்களுக்கு பார்வேர்டு செய்தால் பணம் வரும் என எஸ்எம்எஸ் வருகிறது. இதனால் பலரும் இதை டவுன்லோடிங் செய்து, நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இதை தங்களது வாட்ஸ் அப் முகப்பு பக்கமாகவும் வைத்துள்ளனர்.

எஸ்பிஐ ரிவார்ட்ஸ் ஆப்பில் இடம் பெற்றுள்ள லோகோ எஸ்பிஐ வங்கியின் லோகோ போல இருப்பதால், பலரும் இதை உண்மை என நம்புகின்றனர். தற்போது இது போன்ற புதுவிதமான மோசடி ஆன்லைனில் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் இந்த ஆப் பரப்பப்படுகிறது. பலரும் இதை பார்வேர்டு செய்து வருவதால், பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: ஆன்லைன் குற்றங்களை தடுக்க, நாமக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இருப்பினும் பல்வேறு லோன் தருவதாக கூறி பணம் ஏமாற்றுவது, ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறி பணத்தை பறிப்பது நடந்து வருகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்து வருகின்றனர். அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போது எஸ்பிஐ ரிவார்ட்ஸ் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வரும் ஆப்பை யாரும் இன்ஸ்டால் செய்யவேண்டாம். இது ஒரு ஸ்பேம் வைரஸ். இதை இன்ஸ்டால் செய்தால், அவர்களின் போன் ஹேக் செய்யப்படுவதுடன், போனில் உள்ள மொத்த தகவலும் திருடப்பட்டு விடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். யாராவது இன்ஸ்டால் செய்திருந்தால் உடனடியாக அழித்துவிடவேண்டும். பணம் வரும் என்பதை நம்பவேண்டாம். இணையவழி குற்றங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

The post எஸ்பிஐ ரிவார்ட்ஸ் என்ற பெயரில் புதிய மோசடி; ஆன்லைனில் பணம் வரும் என்பதை நம்பவேண்டாம்: பொதுமக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : SBI Rewards ,SP ,Namakkal ,Namakkal SP ,Dinakaran ,
× RELATED எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர...