சென்னை: இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நாளை நடைபெறும் உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு’ சென்னையில் நாளை நடக்கிறது. இதுகுறித்து, மாநாட்டு ஏற்பாட்டு குழு தலைவர் சி.வி.சுப்பாராவ் நிருபர்களிடம் கூறியதாவது: உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தியாவில் 2009ல் மாநாடு நடந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்படாமல் 2022ல் நார்வேயில் உள்ள கோபன்ஹேகன் நகரில் நடத்தப்பட்டன. இந்த முறை 15 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலும், முதன்முறையாக தமிழ்நாட்டிலும் ‘உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு’ நடத்தப்பட உள்ளது.
3 நாள் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க விழாவை சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் கருப்பொருளாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் இடையூறு மற்றும் உலகளாவிய கப்பல் மற்றும் வர்த்தகத்தின் தாக்கம் விவாதிக்கப்பட உள்ளன. அதேபோல், காலநிலை மாற்றம், நிலைத்தன்மை, புவிசார் அரசியல் இயக்கவியல் மற்றும் கடல்சார் தொழில்துறைக்கான அவற்றின் தாக்கங்கள் போன்ற தலைப்புகள் கருத்தரங்கில் இடம்பெறவுள்ளன. இதில் கப்பல் போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் ஷியாம் ஜெகநாதன், இந்திய கப்பல் பதிவாளர் அலுவலக செயல் தலைவர் அருண் ஷர்மா, பிம்கோ நிறுவனத்தின் தலைவர் நிகோலஸ் ஷூஸ், தி இந்து நாளிதழின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் ஸ்டான்லி ஜானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் முதல் தொடக்க நாள் விவாதமாக இன்டர்டாங்கோவின் டிம் வில்கின்ஸ், பிம்கோவின் டேவிட்லூஸ்லி ஆகியோரால் தொகுத்து வழங்கப்படும். ‘தி போஸிடான் சென்ட்’ மற்றும் ‘தி வொயிட் ஹவுஸ்’ போன்ற அமர்வுகள் மூலம் நுண்ணறிவு மிக்க உரைகள் இடம்பெற உள்ளன. இதில் கடல்சார் துறையை சேர்ந்த முக்கிய வணிகத்தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதேபோல், புகழ்பெற்ற எழுத்தாளரும், புராணவியலாளருமான தேவ்தத் பட்நாயக்வுடன் ஒரு பிரத்யேக அமர்வும், தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாட்களில் தொழில்நுட்ப, வணிக மற்றும் சந்தை சிக்கல்களை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் ஆய்வரங்கமும் நடக்கிறது.
மேலும், மாநாட்டின் இறுதி நாளான வரும் 6ம் தேதி தென்னிந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ் பிரார், கவுரவ விருந்தினராக கலந்துகொள்கிறார். இதன் பாராட்டு விழாவில் வைஸ் அட்மிரல் ஜி.சீனிவாசன் தலைமை விருந்தினராகவும், கப்பல் போக்குவரத்து துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் அமிதாப் குமார் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னையில் நாளை நடக்கிறது; இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.