* மதுரை மாவட்ட டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக தனி தீர்மானம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும், முதல் நாள் கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் குறித்த தனித் தீர்மானத்தை முதல்வர் கொண்டு வர இருப்பதாக சபாநாயர் அப்பாவு கூறினார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (நேற்று) காலை 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அறையில், எனது தலைமையில் நடந்தது. எல்லா கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, அதில் ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாள் (9ம் தேதி) கூட்டத்தில் அரசினர் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.
அன்றையதினமே அரசினர் தனித்தீர்மானமாக மதுரை மாவட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கின்ற டங்ஸ்டன் கனிம சுரங்கத்தினுடைய அனுமதி மாநில அரசு அனுமதி பெறாமல் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான அரசினர் தனித் தீர்மானமாக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வருகின்றார். அந்த தனித்தீர்மானமும் முதல்நாள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்த பின்னர், அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இரண்டாவது நாள் (10ம் தேதி) விவாதம் நடைபெற்று, பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இதுபோல, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையும் நிறைவேற்றப்படும். இரண்டு நாள் கூட்டத்திலும் கேள்வி நேரம் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post டிச.9, 10ம் தேதிகளில் கூடுகிறது: சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.