சென்னை: சென்னையில் இருந்து 107 பயணிகள் உள்பட 113 பேருடன், பெங்களூரு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறங்கியது. இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 113 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 107 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 113 பேருடன் புறப்பட்டு, வானில் பறக்கத் தொடங்கியது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, விமானம் தொடர்ந்து பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து அவசரமாக தரையிறக்கினார். இதை தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, 113 பேர் உயிர் தப்பினர்.
The post சென்னையில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்தபோது விமானத்தில் கோளாறு: 113 பேருடன் அவசரமாக தரையிறங்கியது appeared first on Dinakaran.