×

எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வீதம் மருத்துவத்துறைக்கு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

போளூர்: ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத்துறை மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், திறப்பு விழா ஆகியவை நேற்று ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வரவேற்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரையில் ஏறத்தாழ 2200க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. 1500க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு அரசு அலுவலர்கள் சேவை கிடைக்காத நிலையில் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இதுவரை 350க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். முன்பெல்லாம் மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் மட்டுமே நாய்க்கடி, பாம்பு கடி மருந்துகள் வைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவத்துறை மூலம் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் இதுவரை 1,365 கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் பேசிய எம்பி, எம்எல்ஏக்கள் மருத்துவத்துறை மூலம் புதிய கட்டிடங்கள் கட்ட பல்வேறு கோரிக்கை வைத்தார்கள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வதெல்லாம் இந்த மாவட்டத்தில் அனைத்து எம்பி, எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆளுக்கு ரூ.1 கோடி வீதம் மருத்துவத்துறைக்கு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வீதம் மருத்துவத்துறைக்கு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MLA ,Subramanian ,BOLUR ,JAVVADUMALA ,NEWLY BUILT ,PRIMARY HEALTH CENTRES ,HEALTH CENTRES ,JAVVADUMALAI ,DISTRICT ,MEDICAL DEPARTMENT ,Dinakaran ,
× RELATED மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2...