×

நீலகிரியில் மீண்டும் மேக மூட்டம்

ஊட்டி, நவ.28: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும். பொதுவாக, வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் அதிகளவு பெய்யும். மற்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்த காணப்படும். ஊட்டியில் நவம்பர் மாதம் துவங்கினாலே பனிப்பொழிவு துவங்கி விடும். நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை நீர் பனி காணப்படும். அதன் பின் உறை பனி விழும். இந்நிலையில், கடந்த மாதம் ஊட்டியில் மழை பெய்த நிலையில் பணியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் பகல் நேரத்தில் வெயிலும், இரவில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனி கொட்டி தீர்த்தது. இதனால், புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், பூங்காக்களில் அதிகாலை நேரங்களில் செடிகளில் வெள்ளி இழை போன்று பனித்துளிகள் காணப்பட்டன. அதேசமயம் நீர் பனியின் காரணமாக குளிரும் அதிகரித்தது. அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிரால் பாதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. எனினும், பல பகுதிகளிலும் மேக மூட்டம் காணப்பட்டது. மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக அதிகாலை நேரங்களில் குளிரும் சற்று அதிகரித்து காணப்பட்டது. நீலகிரியில் அடிக்கடி கால நிலையில் மாற்றம் ஏற்படுவதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

The post நீலகிரியில் மீண்டும் மேக மூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiris district ,Northeast ,Coonoor… ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...