×

சிறுகதை-ஒரு கதவு மூடினால்..!

நன்றி குங்குமம் தோழி

அப்பா அவருக்கு தெரிந்த ஆறுதலையெல்லாம் கூறினார். “நந்தும்மா கவலைப்படாத… நிறைய மார்க் வாங்கியும் நீட் தேர்வுல பாஸாகலைன்னு கவலைப்படாத… டாக்டராக முடியாட்டி போவுது வேற நல்ல படிப்புல சேர்ந்து பெரிய வேலைக்கு போகலாம்” என்று சமாதானப்படுத்தினார்.இவள் அமைதியாயிருக்கவே, “உன் வயசுக்கு உங்கம்மாக்கு இந்நேரம் என்னோட கண்ணாலமே ஆயிடுச்சு” என்று புன்னகைத்தார். அப்பொழுதும் இவள் இறுக்கமாயிருக்கவே, “நந்தும்மா அதுக்காகத்தான் உன்னையாவது நல்லா படிக்க வைக்கணும்னு ஆசப்பட்டா உங்கம்மா… ‘ம்’… இதெல்லாம் பாக்காம அவ போய் சேர்ந்துட்டா” என பெருமூச்சுவிட்டார்.

நந்தினியின் கண்களில் கண்ணீர் உருண்டோடத் தயாராய் இருந்தது. மகளை நிமிர்ந்து பார்த்தவர் சட்டென்று தன் கைகளால் அவள் முகத்தை ஏந்திக் கொண்டு, “ஏம்மா அழற… அம்மா போன பின்னாடி என் உலகமே நீதான்னு இருக்கேன். அப்பாவுக்காக வந்து ஒரு வாய் சாப்பிடு” என்று அவளைக் கைப்பிடியாய் இழுத்து அமரவைத்தார். பானையிலுள்ள பழையதை எடுத்துப்போட்டு தயிரூற்றி பிசைந்து உருண்டையாக்கி நடுவில் கட்டை விரலால் குழி செய்து, சூடு செய்த பழைய குழம்பை ஊற்றி உருட்டி அவள் கையில் வைத்தார்.

“ம் சாப்புடும்மா… நீ சாப்பிட்டாதான் அப்பாவும் சாப்பிடுவேன்” என்றார் பழனிச்சாமி. சாப்பாட்டோடு துக்கத்தையும் விழுங்கிய நந்தினி மனசஞ்சலத்தை மறைத்து கையசைத்து தந்தைக்கு விடைகொடுத்தாள். அப்பாவோ, “பத்திரமா கதவ தாள் போட்டுக்கம்மா… காலம் கெட்டுக்கிடக்குது.. அப்பா பொழுது சாயுமுன்னாடி வந்துடுவேன். நாளைக்கு வேற நல்ல படிப்பு எதுன்னு உன் ஸ்கூல் டீச்சர பாக்கப்போலாம்” என தைரியம் சொல்லிச் சென்றார்.

கதவை தாழிட்ட நந்தினிக்கு உலகமே இருட்டானது போலிருந்தது. ஆம். வசதியில்லாததால் அரசுப்பள்ளியில் படித்த நந்தினி கூலி வேலை செய்யும் அப்பாவிற்கு தொந்தரவின்றி நன்கு படித்தாள். ஆசிரியர்கள் வியந்து பாராட்டினர்.நந்தினி சின்னப் பிள்ளையாயிருந்த போது கிராமத்தில் உரிய மருத்துவ வசதியில்லாததால் நான்கு நாள் காய்ச்சலில் நந்தினியின் அம்மா கண் மூடினாள். அதற்கு முன் கணவன் மடியில் தலை வைத்திருந்த அம்மா அப்பாவிடம் இவள் கையை பிடித்து கொடுத்து, பெருமூச்செடுத்து ஈனஸ்வரத்தில் “ஏங்க வழிவழியாக நாட்டு வைத்தியம் பாக்கற குடும்பம் எங்களது. ஆனா, இன்னைக்கு எனக்கு வந்த காய்ச்சலுக்கு மருந்து புரியாம அவதிப்படுகிறேன்னா அதுக்கு நான் படிக்காததுதான் காரணம்.

ஆமா, எழுதப் படிக்க தெரிஞ்சாலாவது எங்க பாட்டன், முப்பாட்டன் தொழில் தெரிஞ்சுக்கலாம். ஆனா, ஒத்த பொம்பளப்புள்ளய படிக்க வைக்காம கட்டிக் குடுத்தாலே போச்சுன்னு இருந்ததால இப்படியாகிப் போச்சு. இப்ப உள்ள டாக்டருங்க புதுசு புதுசா டெஸ்ட் எடுத்து மருந்து கொடுத்தாலும் எங்கப்பா வைத்தியத்துக்கு ஈடாகாது. ம்… எத்தனை பேர் உயிர் காப்பாத்துன அப்பா விதியேன்னு போய் சேர்ந்துட்டார். உங்களால் என்னை காப்பாத்த முடியுதோ இல்லையோ என் புள்ளய நல்லா படிக்க வைச்சு டாக்டராக்கிடுங்க” என மகள் தலையை
தடவியவாறு கண் மூடினாள்.

பழனிச்சாமியும் வேறு திருமணம் செய்யாமல் அரும்பாடுபட்டு கூலித்தொழில் செய்து மகளை படிக்க வைத்தார். ஏன் பக்கத்து வீட்டு மங்கம்மாக்கா கூட சொல்லும், “நைனா பொட்டபுள்ளய படிக்க வச்சு என்ன பண்ணப் போற. பொங்கி போடத் தெரிஞ்சா போதாதா? நீ படிக்க வைச்சா புருசன் வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்கும். பேசாம என்கூட நாலு வீட்டுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பு. அந்தப் பணத்தைக் கொண்டு கண்ணாலம் காச்சின்னு பண்ணிப்புடலாம்” எனக்கூற, “இல்ல மங்கா இந்தக் காலத்துல பொம்பளபுள்ளக்கி புருசனவிட படிப்புதான் சோறு போடும்” எனத் தலையாட்டி மறுத்தார் தந்தை. ‘ம்க்கும்’ என முகவாய்கட்டையில் இடித்துக் கொண்டு போனாள் மங்கம்மாக்கா.

இதோ அதோ என்று நாட்கள் உருண்டோட பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினாள் நந்தினி. ஆனால் நீட் தேர்வில் தோல்வியானதால் டாக்டர் கனவு தகர்ந்தது. டீச்சர் கூட வருத்தப்பட்டார். மனசொடிந்த நந்தினிக்கு இறந்து போன அம்மாவின் ஆசை மனதில் நெருட, மறுபடி அழுதாள். தனியே இருந்தவளுக்கு அந்தி நேரத்தில் புத்தி மயங்கிப் போனது. மதி கெட்டு அந்த விபரீத முடிவை எடுத்தாள். ஆம். ‘ஏம்மவள டாக்டராக்கணும்’ என்ற அப்பாவின் வார்த்தைகளும், மங்கம்மா அக்காவின் இகழ்ச்சியான முகமும் கண்முன் வந்துபோக, ‘சட்டென’ எழுந்தவள் இனி வாழ்வதில் அர்த்தமில்லை என முடிவு செய்தாள்.

பரணில் பாதி தொங்கிய கயிறை இழுத்தாள். கயிறோடு ஒரு மூட்டையும் வந்து விழுந்தது. ஆம். அது அம்மாவின் பழைய துணிமூட்டை. தன்னை ‘மாய்த்துக் கொள்ள’ அம்மாவின் புடவையொன்றை உருவியவள், கசங்கிய துணிகளோடு சில பழைய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் என மூட்டையிலிருந்து வந்து விழுந்தது. புத்தகங்களை பிரித்துப் பார்த்தாள். நாட்டு வைத்திய முறைகள், சித்தர்களின் மருத்துவக் குறிப்புகள், சூரணம், கஷாயம், மூலிகைகள் என பல விஷயங்களுக்கு அம்மருத்துவ முறைகளில் நோயை கண்டறிதல், குணப்படுத்துதல் என்றிருந்தது. அதைப் படித்தவளுக்கு தங்கள் பரம்பரையின் புத்திக்கூர்மையே தனக்குள் பிரதிபலித்ததை உணர்ந்து கொண்டாள். அப்படியே உறங்கியும் போனாள்.

யாரோ தட தடவென கதவை தட்டினார்கள். அட, விளக்கு கூட போடவில்லையே எனப்பதறி எழுந்தவள் தட்டுத்தடுமாறி விளக்கைப் போட்டாள். கதவையும் திறந்தாள்.பழனிச்சாமிதான். “யம்மா தாயி ஏன் கதவத்தொறக்க இத்தன நேரம்? நான் பயந்துட்டேன். வரும் வழியில் உன் டீச்சரம்மாவப் பார்த்தேன். அவுங்க சொன்னாங்க உன்கூட படிக்கிற ராணின்ற பொண்ணு சரியா மார்க் வரலைன்னு விஷம் குடிச்சிட்டு ஆஸ்பத்திரியில் இருக்காம். உன்னை ஏன் தனியே விட்டு வந்தேன்னு ஏசுனாங்க.

டாக்டருக்கு படிக்க முடியாட்டியும் அது சார்ந்த ஏதாவது நல்ல படிப்பு படிக்கலாம். நந்தினிய தைரியமாயிருக்க சொல்லுங்க. காலைல காலேஜ்ல சேர்த்துவிடறேன்னாங்க. ஏம்மா இந்த ராணி மாதிரி தப்பான முடிவு எடுத்துட்டியோன்னு பயந்துட்டேம்மா” என நெஞ்சைப்பிடித்துக் கொண்டார். “நீ ஏம்மா சோர்ந்து போயிட்ட… நமக்கு ஆண்டவன் நல்லதை செய்வான்” என்றவர் அந்தப் பழைய மூட்டைகளை பார்த்து “இதெல்லாம் உங்க அம்மா வீட்டு சொத்து. எனக்கு ஒண்ணும் புரியலைன்னு மேலப்போட்டு வச்சிருந்தேன்.

இது எதுக்கு இப்போ தூக்கிப் போடுமா….” ‘‘இல்லப்பா இந்த சொத்துதான் இனி என் வாழ்க்கைக்கு வழிகாட்டப்போகுது’’ என நினைத்தவள், புத்தகங்களையும், ஓலைச்சுவடிகளையும் அவள் உயிர் காத்த அம்மாவின் புடவையையும் அழகாய் அடுக்கியவள் இதைக் கொண்டு மருத்துவராக முடியாவிட்டாலும், நோய்களையும் அதைக் கண்டறியும் மருந்துகளையும் ஆராயும் படிப்பில் சேர்ந்து மருத்துவ உலகிற்கு நாட்டு மருத்துவம் மூலம் நல்லதை செய்ய முடிவு செய்தாள். கடவுள் ‘ஒரு கதவை மூடி வேறொரு பாதைக்கு தன் மனக்கதவை திறந்ததற்கு’ நன்றி கூறினாள் நந்தினி.

தொகுப்பு: சங்கரிகிருஷ்ணா

The post சிறுகதை-ஒரு கதவு மூடினால்..! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Nandumma ,
× RELATED கர்ப்பகால புற்றுநோய் அறிவோம்!