×

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்காக மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பகுதியில் 1955 மீ. நீளத்தில் 69 தூண்கள் அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலத்திற்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை உள்ள இடங்களில் 1,955 மீட்டர் நீளத்திற்கு 69 தூண்கள் அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை எல்டாம்ஸ் சாலை, எஸ்ஐஇடி கல்லூரி சாலை, செனடாப் சாலை ,நந்தனம், சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, தாடண்டர் நகர் -ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சந்திப்புகளை கடக்கும் வகையில் 3.20 கி.மீ.க்கு நான்கு வழித்தட உயர்மட்ட சாலை (15 மீட்டர் அகலம்) அமைக்கும் பணிக்கு ரூ.621 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

அண்ணா சாலையின் கீழே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை செல்வதால், உயர் மட்ட சாலையிலிருந்து வரும் அழுத்தம், சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ரோ வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசித்து உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும் மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.2 கி.மீ உயர்மட்ட சாலையில் 135 தூண்கள் அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அல்லாத இடங்களில் 655 மீட்டர் நீளத்திற்கு 22 தூண்கள் அமையும். தற்போது இந்த இடத்தில் நிலத்தூண் அடித்தளம் பணி நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை உள்ள இடங்களில் 1,955 மீட்டர் நீளத்திற்கு 69 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். பாலத்தின் அழுத்த திறனை குறைக்கும் வகையில் மைக்ரோ பைல் என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் நடக்க உள்ளது. மேலும் 460 மீட்டர் நீளத்திற்கு தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களில் 41 போர்டல் ப்ரேம் (Portal frame) அமைக்கப்பட்டு உயர்மட்ட பாலப்பணி அமைக்கப்படும்.

இந்த பணிக்கு இடையூறாக உள்ள குடிநீர், கழிவுநீர் குழாய்கள், தெருவிளக்குகள் உடனுக்குடன் அகற்றி பணியை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், பொறியாளர்களுக்கும் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை டிசம்பர் 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்தில் கடந்து செல்லலாம். மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்காக மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பகுதியில் 1955 மீ. நீளத்தில் 69 தூண்கள் அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tenampattai ,Saithapet ,Chennai ,Metro Rail Tunnel ,Tenampet ,Chennai Anna Road ,Denampet ,Tenampettai ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!