புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மட்டுமே டெல்லியில் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தலைமையிலான அமர்வு நேற்று காலை கூடியதும், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி, ‘‘டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த கிராப்-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றங்களுக்கு என எந்த பிரத்யேக உத்தரவுகளும் இல்லை.
ஆனாலும், உச்ச நீதிமன்றத்திற்கு தினமும் 10,000 வழக்கறிஞர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். கிளார்க்குகளும் அவர்களின் சொந்த வாகனத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினர். முற்றிலும் ஆன்லைன் முறைக்கு மாறுவதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘‘முடிந்த இடங்களில் மெய்நிகர் விசாரணைகளை அனுமதிக்குமாறு அனைத்து நீதிபதிகளிடமும் நாங்கள் கூறியுள்ளோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மெய்நிகர் மூலம் ஆஜராகி வாதாடுங்கள். ’’ என்றார். இதற்கிடையே, காற்று மாசு காரணமாக உச்ச நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டுமென நேற்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
The post டெல்லியில் கடும் காற்று மாசு மெய்நிகர் மூலம் ஆஜராக வக்கீல்களுக்கு அனுமதி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.