புதுடெல்லி: மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, மலையாள திரையுலகினர் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நடிகை ஒருவர், கடந்த 2016ம் ஆண்டு நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு புகார் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாலியல் வழக்கில், கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு நடிகர் சித்திக் தாக்கல் செய்த மனுவை கேரளா உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்திருந்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடிகர் சித்திக் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “இந்த சம்பவம் கடந்த 2016ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தனை ஆண்டுகள் ஏன் அவர் மவுனமாக இருந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பேஸ்புக்கில் பதிவிட தைரியம் உள்ள அவர் ஏன் காவல்நிலையத்துக்கு செல்லவில்லை? இந்த நபர் மொத்தம் 14 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், புகாரளிக்க ஹேமா கமிட்டி முன்பு செல்ல மறுக்கிறார். எனவே தற்போதைய நிலையில் இருக்கும் அனைத்து விவகாரத்தையும் கருத்தில் கொண்டு நடிகர் சித்திக்குக்கு முன்ஜாமின் வழங்குகிறோம். சித்திக் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
The post பாலியல் பலாத்கார வழக்கு மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் appeared first on Dinakaran.