×

43 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் ஜார்க்கண்டில் இன்று ஓட்டுப்பதிவு: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல்

ராஞ்சி: ஜார்க்கண்டில் இன்று 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதே போல் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்றும் (நவ. 13), 38 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக வரும் 20ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளன. நவ.23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் 43 சட்டப்பேரவை தொகுதிக்கான பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அங்கு மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதே போல் 48 சட்டப்பேரவை தொகுதிகள், கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதி, மகாராஷ்டிராவில் நந்தண்ட் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் 47 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்றும், மகாராஷ்டிராவில் உள்ள நந்தண்ட் மக்களவை தொகுதி, உத்தரகாண்டில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உபியில் 9, பஞ்சாப் மாநிலத்தில் 4, கேரளாவில் ஒரு தொகுதி உள்பட 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி நவ.13ல் இருந்து நவ.20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மீதம் உள்ள 33 சட்டப்பேரவை தொகுதிகளில் சிக்கிம் மாநிலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சோரெங்-சகுங் மற்றும் நாம்சி-சிங்கிதாங் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) வேட்பாளர்களான ஆதித்யா கோலே மற்றும் சதீஷ் சந்திர ராய் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், 31 சட்டப்பேரவை தொகுதி மற்றும் வயநாடு மக்களவை தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 43 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்கும் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 43 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் ஜார்க்கண்டில் இன்று ஓட்டுப்பதிவு: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Wayanad ,Priyanka Gandhi ,Ranchi ,Wayanad Lok Sabha ,Jharkhand.… ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...