×
Saravana Stores

‘மைனிங்’ முறையில் தரம்பிரித்து மட்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு

*மட்காத குப்பைகள் அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

*30 ஆண்டுகளாக குப்பை மலைகளுக்கு தீர்வு

மன்னார்குடி : மன்னார்குடி நகராட்சியில் 30 ஆண்டுகளாக மலைபோல் குவிந்துள்ள குப்பைகளுக்கு மைனிங் முறையில் தரம்பிரித்து, குப்பையில்லா பசுமை நகரமாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.மன்னார்குடி நகரத்தில் 33 வார்டுகளில் இருந்து நாள்தோறும் 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அக்குப்பைகள் அனைத்தும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தனித்தனியே தரம் பிரிக்கப்பட்டு ஆர்பி சிவம் நகர், வடசேரி சாலை, டெப்போ ரோடு உள்ளிட்ட மூன்று இடங்களில் வைத்து மக்கும்குப் பைகளிலிருந்து எரு, உயர் உரம் தயார் செய்யப்படுகிறது. மக்கா குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு நாள்தோறும் அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது.

தரம்பிரிப்பு: மன்னார்குடி டெப்போ ரோடு பகுதியில் சுமார் 2. 65 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளாக தேங்கியிருந்த 68 ஆயிரம் கன மீட்டர் குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் தரம் பிரித்து அவற்றை இரண்டு கட்டங்களாக அகற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு முதல் கட்டமாக ரூ.2.68 கோடி மதிப்பில் 41 ஆயிரம் கன மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா எடுத்த தொடர் முயற்சி காரணமாக இரண்டாம் கட்டமாக ரூ.1.65 கோடி மதிப்பில் 27 ஆயிரம் கன மீட்டர் குப்பைகளை பையோ மைனிங் முறையில் அகற்றும் பணிகள் நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் நேரடி மேற்பார்வையின் கீழ் தீவிரமாக நடந்து வருகிறது.மின்னும் மன்னை திட்டம்: இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு மன்னார்குடி நகரம் ‘குப்பை இல்லா நகரமாக’ மாறும். குப்பை கிடங்கு அமைந்துள்ள அந்த இடம் சுத்தம் ஆகும். மின்னும் மன்னை திட்டத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மன்னார்குடி நகராட்சி ஆணையர் சியாமளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான ஜீயா தோப்பு பகுதியில் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு வருவது சாத்தியமில்லாதது. நகரத்தின் மையப்பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதால் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

20 டன் குப்பைகள் உற்பத்தி: மன்னார்குடி நகரத்தில் இருந்து வரும் 33 வார்டுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் 20 டன் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான மூன்று நுண்ணுயிர் உரம் மையங்களில் (எம்சிசி) தொடர்ச்சியாக உரமாக்கப்படுகிறது. மேலும், குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும். மக்காத பிளாஸ்டிக்கழிவுகள் அனைத்தும் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மையை பொறுத்தவரையில் முதல் கட்டமாக நகரத்தில் அமைந்துள்ள 10 குளங்கள் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 கோடியில் புனரமைக்கப் பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மைக்கு விருது: நீர் மேலாண்மை மற்றும் குப்பைகளை முறையாக கையாளுவதில் மன்னார்குடி நகராட்சி சிறந்து விளங்குவதால் தமிழ்நாடு முதலமைச்சரால் 2023 ஆம் ஆண்டில் நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மழைக்கால முன்னேற்பாடு நடவடிக்கையாக நகரத்தில் உள்ள அனைத்து வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, வெள்ள தடுப்பு மற்றும் நீர் மேலாண்மையில் நகராட்சி சிறந்து விளங்குகிறது. மன்னார்குடி நகரத்தை தூய்மை நகரமாக மாற்றக்கூடிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post ‘மைனிங்’ முறையில் தரம்பிரித்து மட்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டி நகராட்சியில்...