சென்னை: அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவும் இல்லை, தத்துக் கொடுக்கவும் இல்லை. அதுகுறித்து அறிக்கை விடுமுன் என்ன பேசப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி கூறியதாவது:
தனியார் பள்ளிகள் நடத்துவோரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதால் அவர்கள் தரப்பில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சிஎஸ்ஆர் நிதி கிடைக்கிறது. அதேபோல நம்பள்ளி திட்டத்தின் கீழ் இதுவரை சிஎஸ்ஆர் நிதி ரூ.504 கோடி பெறப்பட்டுள்ளது. அதில் ரூ.350 கோடிமதிப்பு பணிகள் நடக்கிறது. அதுபோன்ற பணிகளுக்கு நாங்களும் எங்கள் தரப்பில் நிதி தருகிறோம் என்று சொன்னதற்கு நன்றி என்றுதான் சொன்னேன். ஆனால் தாரை வார்த்து விட்டதாக கூறுவது தவறு.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவேண்டியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு சில நிபந்தனைகளை விதிக்கிறது. அதனால் நமது கொள்கையை விட்டுக் கொடுத்து அந்த நிதியை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நமது முதல்வர் சொன்னார். இந்நிலையில் தான் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நமது மாநில நிதியில் இருந்து ஊதியம் வழங்கி வருகிறோம். இதுகுறித்து விளக்கம் ெகாடுத்து நான் ஓய்ந்துவிட்டேன். திரும்ப திரும்ப சொல்கிறோம்.
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு நாங்கள் தத்தும் கொடுக்கவில்லை, தாரைவார்த்தும் கொடுக்கவில்லை. சிஎஸ்ஆர் செயல்பாடுகளில் 3 வகைகள் உள்ளன. என்ன தேவையோ அதை அவர்கள் நேரடியாக வழங்குகின்றனர். அவர்களே நேரடியாக வந்து கொடுக்கின்றனர். அவர்களிடம் அரசுப் பள்ளிகளை நாங்கள் ஒப்படைக்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை இன்னும் நாம் வழங்கவில்லை.
பள்ளிக் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள நிலையில், அதுகுறித்து என்ன ஆனது என்று தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளவர் கேள்வி கேட்பதற்கு முன்னதாக அது குறித்து முழுமையாக அறிந்து கொண்டு அது குறி்த்து அறிக்கைவிட வேண்டும். அவர்களே ஒரு குழு அமைத்து கண்காணிக்கலாம். இது குறித்து விரைவில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே அரசு பள்ளிகள் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கப்படும் என்ற செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்ததை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
The post அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் appeared first on Dinakaran.