×

செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகள், அலங்கரிக்கப்பட்ட ரயில்பெட்டி, கப்பல் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன

சென்னை, ஜன.3: செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் 4வது மலர் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னையில் முதல் மலர்காட்சி கலைவாணர் அரங்கில் 3.6.2022 முதல் 5.6.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. செம்மொழி பூங்காவில் 3.6.2023 முதல் 5.6.2023 வரை நடைபெற்ற 2வது மலர் காட்சியினை 23,302 பார்வையாளர்கள் பார்வையிட்டனர். 3வது மலர்க்காட்சி செம்மொழி பூங்காவில் 10.2.2024 முதல் 20.2.2024 வரை 11 நாட்கள் நடைபெற்றது. இதனை 1,09,027 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

தற்போது, 4வது சென்னை மலர் காட்சி ஜனவரி 2025-இல் செம்மொழிப் பூங்காவில் நடைபெறுகிறது. இதில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, ரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்டிலைன், அக்லோனிமா, எராந்திமம், ஃபிலோடென்ட்ரான் போன்ற பல்வேறு அலங்கார இலைத்தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சிறப்புமிக்க மலர் காட்சியை தமிழ்நாடு முதல்வர் நேற்றைய தினம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், பூங்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இம் மலர்க்காட்சி நேற்று முதல் (ஜன 2) தொடங்கி வருகிற 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும். மேலும் < https://tnhorticulture.in/spetickets/ > என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு, எழிலன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் செல்வி அபூர்வா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மலர் காட்சியை பார்வையிட கட்டணம்
சென்னையில் நேற்று தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி வருகிற 18ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ₹200ம், சிறியவர்களுக்கு ₹100ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், கேமராவுக்கு ₹ 500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்திற்கு தனி கட்டணம். இரு சக்கர வாகனத்திற்கு ₹ 20ம், காருக்கு ₹ 100 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

The post செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகள், அலங்கரிக்கப்பட்ட ரயில்பெட்டி, கப்பல் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன appeared first on Dinakaran.

Tags : 4th Flower Show of Chennai ,Chemmoshi Park ,K. STALIN ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,MLA ,Kalaivanar Arena ,Semmozhi Park ,Chemmozhi Park ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...