×
Saravana Stores

அரசு இணைய தளத்தில் ஊட்டி விடுதிகள், ரிசார்ட்கள் விவரம் வெளியிட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த இ-பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதிஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் சீனிவாசன், நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் பெற விண்ணப்பவர்களிடம் எப்போது வருகிறார்கள், எங்கு தங்க இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்ற விவரங்கள் பெறும் வகையில், விண்ணப்பத்தில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தவறான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, முழுமையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் சட்டவிரோதமாக 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஊட்டியில் உள்ள உரிமம் பெற்ற விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்த விசாரணையின் போது நீலகிரி மாவட்ட கலெக்டர் காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அரசு இணைய தளத்தில் ஊட்டி விடுதிகள், ரிசார்ட்கள் விவரம் வெளியிட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ooty hotels ,High Court ,Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Ooty ,Madras High Court ,Kodaikanal ,
× RELATED அரசு சட்ட கல்லூரிகளில் காலியாகவுள்ள...