×
Saravana Stores

குன்னூரில் தொடரும் மழையால் 15 இடங்களில் மரம், பாறை விழுந்து போக்குவரத்து துண்டிப்பு


குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. ஊட்டியிலும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. ஊட்டி-கூடலூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபாதையை ஒட்டியிருந்த ராட்சத மரம் நேற்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென சரிந்து பக்கவாட்டில் விழுந்தது. அந்த சமயத்தில் நடைபாதையை யாரும் பயன்படுத்தாததால் உயிர் பலி ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.குன்னூர் உழவர் சந்தை, மாடல் ஹவுஸ் பகுதியில் குப்பைகளுடன் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் நடைபாதை படிக்கட்டுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரம் விழுந்ததை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

இதேபோல் 15க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காந்திபுரம் பகுதியில் செல்வராஜ், மீனாட்சி தம்பதியரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்பகுதியில் நடைபாதைக்கு அடியில் அடுக்கி வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட மண் மூட்டைகள் ஒரு வீட்டின் மேல் சரிந்து விழுந்தது. தொடர்ந்து பாரத் நகர் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்பாலம் பகுதியில் மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் மஞ்சூர் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெட்போர்டு பகுதியில் தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள கட்டிடம் இடிந்ததில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. பொக்லைன் இயந்திர உதவியுடன் சீரமைக்கப்பட்டது.

The post குன்னூரில் தொடரும் மழையால் 15 இடங்களில் மரம், பாறை விழுந்து போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris district ,Ooty ,Ooty-Kudalur road ,Dinakaran ,
× RELATED பென்ஷன் வாங்க குவிந்த முதியோர்