×

சாலை பழுதால் அதிகாரிகள் முடிவு கோதையாருக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

*மலைவாழ் மக்கள் திண்டாட்டம்

குலசேகரம் : சாலை பழுதால் கோதையாறு பகுதிக்கு பஸ் போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். இதனால் மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கோதையாறு, மலைவாழ் மக்கள் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாட்டின் முக்கியமான நீர் மின் நிலையங்கள் இங்கு உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. கோதையாருக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குலசேகரம், மார்த்தாண்டம் போன்ற இடங்களிலிருந்து நேரடியாக பஸ் போக்குவரத்து உள்ளது.

பேச்சிப்பாறையிலிருந்து சுமார் 16 கிமீ தூரம் கோதையாருக்கு சாலை உள்ளது. கோதையார் சூழியல் சுற்றுலா ஸ்தலமாக உள்ளதால் சுற்றுலா வாகனங்களும் அதிகம் சென்று வரும் சாலையாக இது உள்ளது. இந்த சாலை நீண்ட காலமாக செப்பனிட படாததால் மிக மோசமான நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் சாலையாக உள்ளது.
பொதுமக்கள், கட்சியினரின் நீண்ட போராட்டம் காரணமாக இந்த சாலையில் பேச்சிப்பாறையில் தொடங்கி சுமார் 6 கிமீ தூரம் இந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. மீதமுள்ள பகுதி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் சாலை ஏராளமான இடங்களில் மேடு, பள்ளமாக மாறிவிட்டது.

இதில் மூக்கரைகல் என்ற பகுதியில் மலையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீர் சாலையின் அடிப்பகுதி வழியாக செல்லும் பகுதியில் சிறிய கல்வெர்ட் பாலம் உள்ளது. இதில் மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பாய்ந்து செல்லும். தற்போது இந்த பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கனமழை பெய்து தண்ணீர் அதிகரிக்கும் போது உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியை கலெக்டர் அழகு மீனா 2 நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார்.

போக்குவரத்து கழக அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து நேற்று முதல் பஸ் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். தற்போது கோதையார், குற்றியார் செல்லும் பஸ்கள் வழுக்கம்பாறை பகுதியுடன் நிறுத்தப்பட்டது. மதியம் 12 மணியளவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காலையில் கோதையாறு பகுதிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மாலையில் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்த தகவல் பரவியதை அடுத்து ஒரே ஒரு பஸ் கோதையாறுக்கு இயக்கப்பட்டது. அதில் தொழிலாளர்கள் ஏறி ஊர் திரும்பினர்.

The post சாலை பழுதால் அதிகாரிகள் முடிவு கோதையாருக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Gothaiyar ,Dindatam Kulasekaram ,Gotaiaru ,KUMARI ,Dinakaran ,
× RELATED திருக்குறுங்குடியில் இரண்டாவது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்