×

திருக்குறுங்குடியில் இரண்டாவது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

களக்காடு,மே 25: களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல் கோதையாறு வனச்சரகங்களில் ஆண்டுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்தாண்டு யானை கணக்கெடக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதனை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலையணையில் துவக்கி வைத்தார். திருக்குறுங்குடி, மேல் கோதையாறு வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுப்பிற்கு சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறையினர் 85க்கும் மேற்பட்ேடார் 22 பீட்களில் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாள் அடர்ந்த வனப்பகுதியில் 15 கி.மீ. தூரம் நடந்து சென்று யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்

2ம் நாளான நேற்று திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் நம்பிகோயில் பீட்டில் நடந்த கணக்கெடுப்பில் யானைகளின் எச்சங்கள், கால் தடங்கள் சேகரிக்கப்பட்டன. அதனை எம்.ஸ்டிரைப் செல்போன் ஆப்பில் பதிவு செய்தனர். மேலும் சாணங்களை மெசர்மென்ட் டேப் மூலம் அளவீடு செய்தனர். வனப்பகுதிக்குள் நல்ல மழை பெய்து வந்த போதும் கணக்கெடுப்பு பணிகள் தொய்வின்றி நடக்கிறது. இன்று (25ம்தேதி), 3வது நாள் நீர்நிலைகளை சார்ந்த பகுதிகளில் யானைகள் வந்து செல்லும் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

அதன் பின்னர் 3 நாட்களாக 34 குழுவினரும் கணக்கெடுப்பில் சேகரித்த மொத்த விவர குறிப்புகள், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். இதையடுத்து களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வனப் பாதுகாவலரின் பார்வைக்கு கணக்கெடுப்பு விவரங்கள் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் முதுமலை யானைகள் காப்பகம் மூலம் டெல்லியில் உள்ள யானைகள் திட்ட அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் பின்னரே களக்காடு வனக்கோட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post திருக்குறுங்குடியில் இரண்டாவது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tirukurungudi ,Kalakadu ,Mel Gothaiyar ,Kalakadu Tiger Reserve ,Deputy Director ,
× RELATED திருமலைநம்பி கோயிலுக்கு செல்லவும் தடை