×

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: சுற்றுலா தலங்கள் களைகட்டுகிறது

ஊட்டி: தொடர் விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளன. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பள்ளி அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர் விடுமுறை வந்த நிலையில், நீலகரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, சூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளை சுற்றுலா பயணிகள் மொய்த்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களால் நகரின் முக்கிய சாலைகளான கூடலூர் – ஊட்டி சாலை, குன்னூர் – ஊட்டி சாலை, பூங்கா சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், உணவு விடுதிகள், ஓட்டல்களில் மதிய நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புறநகர் பகுதிகளில் சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு உணவு மற்றும் பல்வேறு தவைளுக்காக அதிகளவு சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் வரும் போது, கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பூங்கா செல்லும் வாகனங்களை டிபிஓ., கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக தாவரவியல் பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோல், தாவரவியல் பூங்காவில் இருந்து வெளியில் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன.

எனினும், அவ்வப்போது ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களும், கடைவவீதிகளும் மக்கள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. ஊட்டி படகு இல்லத்தில் வெகுநேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: சுற்றுலா தலங்கள் களைகட்டுகிறது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Christmas ,Dinakaran ,
× RELATED களை கட்டிய சுற்றுலா தலங்கள் ஊட்டி,...