×
Saravana Stores

மூன்றரை மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவில் தங்கத்தேர் உலா

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாலை தங்கத்தேர் உலா நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தேர் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாகும். தேரில் வள்ளி, தெய்வானை அம்மனுடன் எழுந்தருளியிருக்கும் சுவாமி ஜெயந்திநாதரை பக்தர்கள் ரூ.2,500 கட்டணத்தில் முன்பதிவு செய்து தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தற்போது கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தமிழக முதல்வரால் கடந்த 28.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடைபெறுவதற்காக கடந்த ஜூலை 17ம்தேதி முதல் தங்கத்தேர் உலா ரத்து செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்தது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா நேற்று (2ம்தேதி) தொடங்கி வருகிற 7ம்தேதி சூரசம்ஹாரமும், 8ம்தேதி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. இதையடுத்து சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு கந்த சஷ்டி விழாவிற்காக நேற்று மாலை தங்கத்தேர் உலா நடந்தது. தேரில் வள்ளி, தெய்வானை அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தும், அதேபோல் கோயில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்களும் தேரில் எழுந்தருளிய சுவாமியை வழிபட்டனர்.

இதனால் பக்தர்கள் கூட்டத்திற்கு நடுவே தங்கத்தேர் கிரிப்பிரகாரம் சுற்றி வந்து நிலைக்கு வந்தது. நேற்று (2ம்தேதி) முதல் கந்த சஷ்டி ஐந்தாம் திருவிழாவான வருகிற நவ. 6ம்தேதி வரை தினசரி மாலை கிரிப்பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறுகிறது.

The post மூன்றரை மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவில் தங்கத்தேர் உலா appeared first on Dinakaran.

Tags : Tangatere ,Kanda Sashti Festival ,Tricendur ,Thiruchendur ,Kanda Sashti ceremony ,Subramaniya Swami Temple ,Kriprakaram ,
× RELATED ரத்தினகிரி கோயிலில் 4ம் நாள் கந்த...